இயக்குநர் த்ரிவிக்ரம் இயக்கத்தில் பவன் கல்யாண் நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான படம் ‘அத்திரண்டிகி தாரேதி’. இப்படம் பல விருதுகளையும் அதிக வசூலையும் குவித்ததால் கன்னடம் மற்றும் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது.
இதையடுத்து தற்போது இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை லைக்கா நிறுவனம் வாங்கியுள்ளது. இந்தப் படம் சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடிப்பில் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’என உருவாகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் மாதம் ஜார்ஜியாவில் தொடங்கியது. இதில் சிம்புக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார்.
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த தீபாவளி அன்று வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இப்படம் வரும் பொங்கல் அன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சிம்புவுக்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியது.
இந்நிலையில், சிம்பு புதிதாக விலை உயர்ந்த பெண்ட்லி கார் ஒன்று வாங்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியது. அதற்கான டெமோ காரை சிம்பு நேற்று ஓட்டி பார்த்ததாக தெரிகிறது. இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சிம்பு வாங்கும் காரின் விலை 3.6 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.