பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் தல60, தளபதி64 

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் தல60, தளபதி64 

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் தல60, தளபதி64 

எம்.ஜி.ஆர் - சிவாஜி. ரஜினி - கமல் என்ற வரிசையில் இணைந்தவர்கள் அஜித் - விஜய். ஆரம்ப காலத்தில் இருந்து இவர்கள் படம் வெளிவருகிறது என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். இவர்களுக்கு இடையே நேரடி போட்டியில்லை என்றாலும் அவர்களது ரசிகர்கள் அதனை உருவாக்கி விடுகின்றார்கள்.

ஆகஸ்ட் மாதம் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றிக் கூட்டணியே அடுத்தப்படத்திலும் தொடர்கிறது. இத்திரைப்படத்தை இயக்குனர் ஹெச்.வினோத், ஆக்‌ஷன் திரில்லர் களத்தில் கதையை உருவாக்கியுள்ளார். தல 60 படத்திற்காக, நடிகர் அஜித் உடல் எடை குறைத்து இளமை தோற்றம் கொண்ட புகைப்படங்களும் சமீபத்தில் வெளியாகி அவரது ரசிகர்களுக்கு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தின. 

காவல்துறை அதிகாரியாகவும், பைக் ரேஸராகவும் அஜித் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில படங்களில் சால்ட் அண்ட் பெப்பர் கெட் அப்புடன் நடித்த அஜித், தனது பழைய கெட்டப்புக்கு மாறியுள்ளார். படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. படத்துக்கான போட்டோ ஷீட் பணிகள் துவங்கியிருப்பதாக புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி இருந்தன. காக்கிபேண்ட், வெள்ளை டி சர்ட், கண்களில் கூலர்ஸ் என்று போலீஸ் அதிகாரியாக தோற்றமளிக்கிறார் அஜித். 

2019ஆம் ஆண்டு, அஜித்தின் ஆண்டு என்று சொல்லலாம். இந்த ஆண்டில் வெளியான விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை ஆகிய இரண்டு படங்களும் செம ஹிட் அடித்தன. இந்நிலையில், தல 60 திரைப்படமும் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு புறம் இருக்க தளபதி 64 திரைப்படமும் தற்போது கோலிவுட்டின் மிகப்பெரிய டாக்காக உள்ளது.

மாநகரம் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார் விஜய். இதற்கான அதிகாரப் பூர்வ அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. இப்படத்தில் விஜயுடன் நடிக்கும் நடிகர்களின் விவரங்களை படக்குழு தொடர்ச்சியாக அறிவித்து வருகிறது. விஜய்சேதுபதி, மலையாள நடிகர் அந்தோணி வர்கீஸ், சாந்தனு, மாளவிகா மோகனன் ஆகியோர் இணைந்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

படத்தின் போஸ்டரில் விஜய் பெயருடன் சேர்ந்து,‌ விஜய் சேதுபதி பெயரும் இடம் பெற்றிருப்பது, விஜய்யின் பெருந்தன்மையைக் காட்டுவதாக அவரது ரசிகர்கள் கூறுகின்றனர். கத்தி படத்திற்கு பிறகு விஜயுடன் ‌மீண்டும் இணைந்துள்ளார் இசையமைப்பாளர் அனிருத். பேட்ட திரைப்படத்தின் பாடல்களை தொடர்ந்து, தளபதி 64 படத்தின் பாடல்களும் இளைஞர்களில் பல்சை பதம்பார்க்கும் எனலாம். இந்த படத்தில் பேராசிரியராக விஜய் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

விறுவிறுப்பான திரில்லர் கதையை மையமாக வைத்து உருவாகவுள்ள இந்த திரைப்படத்தை குறைந்த நாட்களில் படமாக்கி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். பிகில் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வரும் நிலையில், விஜய் 64 திரைப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. இதனால், பிகில் திரைப்படத்தை மிஞ்சும் அளவிற்கு தளபதி 64 திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com