பைரவாவிற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க இடைக்காலத் தடை
தமிழக திரையரங்குகளில் பைரவா படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
விஜய் நடிப்பில் வெளிவந்திருக்கும் படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேவராஜ் என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார். இது குறித்த வழக்கில் தமிழக திரையரங்குகளில் பைரவா திரைப்படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க இடைக்காலத் தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு, விசாரணையை 3 வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளது.
முன்னதாக சில தினங்களுக்கு முன்பு இவ்வழக்கு குறித்த விசாரணையில் பதிலளித்த அரசுத் தரப்பு வழக்கறிஞர் மணிசங்கர் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக புகார் தெரிவிக்க மாவட்ட வாரியாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றிற்கான தொலைபேசி எண்கள் விளம்பரம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று பைரவா திரைப்படத்திற்கு நீதிபதி டிக்கெட் பூக் செய்துள்ளார். அப்பொழுது 6௦ ரூபாய் அதிகமாக கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இது குறித்து புகார் தெரிவிக்க அமைக்கப்பட்டுள்ள குழுக்களின் புகார் போன் எண்னை நீதிபதி தொடர்பு கொண்டபோது அந்த எண் செயல்படாததால் அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். இந்நிலையில் பைரவா படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.