"பாகுபலியில் இருக்கும் மெக்சிகோ கனெக்ஷன்!" - ராஜமௌலி சொன்ன ரகசியம் | CCXPMX26 | Varanasi
ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ்பாபு, பிரித்விராஜ், ப்ரியங்கா சோப்ரா நடிப்பில் உருவாகி வரும் படம் `வாரணாசி'. இப்படத்தின் BTS காட்சிகள் மெக்சிகோவில் நேற்று நடைபெற்ற வரும் Comic Con Experience MX 2026 நிகழ்வில் திரையிடப்பட்டது. மேலும் இயக்குநர் ராஜமௌலி பேசிய ஒரு வீடியோ பதிவையும் திரையிட்டனர்.
அதில் "என் முந்தைய படமான பாகுபலியில், நகர மையம் மற்றும் சிம்மாசனம் போன்றவை புகழ்பெற்ற Chichen Itza பிரமிடை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டன. ஆனால், மெக்சிகன் வரலாறு, பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் பற்றிய என் அறிவு மிகவும் குறைவு என்பதை நான் ஒப்புக்கொள்ள வேண்டும். ஆனால் இப்போது, உங்களைப் போன்ற அற்புதமான மக்களைப் பற்றி மேலும் மேலும் அறிந்துகொள்ள இது எனக்கு உதவும் என்று நம்புகிறேன்.
நான் சுமார் 25 ஆண்டுகளாகத் திரைப்படங்கள் எடுத்து வருகிறேன். ஆனாலும் உங்கள் கதை கடல்களைக் கடந்துவிட்டது என்பதை உணரும்போது, அதை எதிர்கொள்ள எதுவும் உங்களை தயார்படுத்தாது. ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள மக்கள், நீங்கள் உருவாக்கிய ஒன்றைப் பார்த்துச் சிரிக்கிறார்கள், அழுகிறார்கள், நடனமாடுகிறார்கள். அதைத்தான் 'ஆர்.ஆர்.ஆர்' எனக்குச் செய்தது. என் நாடான இந்தியா மட்டுமல்ல, ஒரு உலகளாவிய உணர்ச்சி ஒவ்வொரு மூலையையும் சென்றடையப் போதுமானது என்பதை ஒட்டுமொத்த உலகமும் எனக்குக் காட்டியது. 'நாட்டு நாட்டு' பாடல் உலகம் முழுவதும் பாடப்பட்டு, ஆடப்பட்டதைக் கேள்விப்படும் போது, 'ஆம்! நான் திரைப்படங்கள் எடுப்பதற்கான சரியான காரணம் இதுதான்' என்று நினைத்தேன்." என்று பேசி இருந்தார்.
மேலும் இந்த நிகழ்வில் 'Avengers: Doomsday', 'Spider-Man: Brand New Day', 'Supergirl' மற்றும் வெப் சீரிஸானா 'House of the Dragon' போன்றவற்றின் காட்சிகளும் திரையிடப்பட்டுள்ளது. அதேவேளையில் இந்நிகழ்வில் வாரணாசி சம்பந்தமான நிகழ்வின் போது, அதனை பார்வையாளர்கள் பலரும் புறக்கணித்து சென்றதாகவும், இது இன ரீதியான நிராகரிப்பு எனவும் இணையத்தில் பலரும் கருத்து தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

