ஸ்ரீதேவி சம்பளம் பற்றிப் பேசி இருக்கக் கூடாதுதான்: ராஜமௌலி ஒப்புதல்
ஸ்ரீதேவி பாகுபலியில் நடிக்காதது தொடர்பான விவகாரத்தில் அவர் அதிக சம்பளம் கேட்டது தொடர்பாக நான் பொதுத்தளத்தில் பேசி இருக்கக் கூடாது என ராஜமௌலி கூறியிருக்கிறார்.
ராஜமௌலி இதுகுறித்து கூறும்போது, " என்னுடைய கருத்தை ஏற்பதோ, அல்லது ஸ்ரீதேவி கருத்தை ஏற்பது என்பதோ மக்கள் சம்பந்தப்பட்ட விஷயம். ஆனால் ஊதியம் தொடர்பான விஷயத்தை பொதுத் தளத்தில் நான் பேசியிருக்ககூடாது. அந்த விஷயத்தில் மட்டும் நான் தவறு செய்துவிட்டேன். அதனை நான் மனப்பூர்வமாக ஒத்துக்கொள்கிறேன். அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.
பாகுபலி படத்தில் ராஜமாதா சிவகாமி தேவியாக ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். ஆனால் இந்த கேரக்டரில் நடிக்க முதலில் நடிகை ஸ்ரீதேவிக்கு தான் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அவர் அதிகப்படியான சம்பளம் கேட்டதால் ரம்யா கிருஷ்ணனுக்கு வாய்ப்பு சென்றதாகவும், ஸ்ரீதேவி நடிக்காதது சந்தோஷம்தான் எனவும் ராஜமௌலி நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார். ஆனால் ராஜமௌலி அவ்வாறு பேசியது என் மனதை காயப்படுத்திவிட்டது என ஸ்ரீதேவி மற்றொரு நேர்காணலில் தெரிவித்தார். மேலும், ராஜமௌலி மீது தான் மிகுந்த மரியாதை வைத்திருப்பதாவும், அவர் படத்தில் நடித்தால் மகிழ்ச்சியே என்றும் ஸ்ரீதேவி தெரிவித்திருந்தார். இந்நிலையில் ராஜமௌலி தான் அப்படிப் பேசி இருக்கக் கூடாது என வருத்தம் தெரிவித்துள்ளார்.

