அரசியல் பின்னணி இருந்தும் மௌனம் சாதித்த ஸ்ரீதேவி
மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் குடும்பத்தினர் அரசியல் பின்னணி உடையவர்களாக இருந்தும் அதுபற்றி அவர் பொதுமேடைகளில் கூறியதில்லை.
துபாயில் காலமான நடிகை ஸ்ரீதேவியின் உடலை இந்தியா கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் துரிதகதியில் நடைபெற்று வருகிறது. ஸ்ரீ தேவியின் குடும்பத்தினர் அரசியல் பின்னணி உடையவர்களாக இருந்தும் அதுபற்றி அவர் எந்த பொதுமேடைகளிலும் கூறியதில்லை என்று கூறப்படுகிறது.
ஸ்ரீதேவியின் தந்தை ஐயப்பன் கடந்த 1989-ஆம் ஆண்டு சிவகாசி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது அவரை ஆதரித்து ஒரு வார காலத்திற்கும் மேலாக சொந்த கிராமமான மீனம்பட்டியில் தங்கி ஸ்ரீதேவி பரப்புரை மேற்கொண்டார். ஆனால் ஸ்ரீதேவியின் தந்தை ஐயப்பன் திமுக வேட்பாளர் சீனிவாசனிடம் தோல்வியை தழுவினார்.
மேலும், ஸ்ரீதேவியின் பெரியப்பா ராமசாமி நாயுடு 1977ஆம் ஆண்டு ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக வெற்றிபெற்றார். அதுமட்டுமல்லாமல் 20 ஆண்டுகள் அனுப்பன்குளம் ஊராட்சி மன்ற தலைவராகவும், 10 ஆண்டுகள் ஊராட்சி ஒன்றிய தலைவராகவும் அவர் இருந்துள்ளார்.