அசராத ஸ்பைடர்மேன்: 10 இந்திய மொழி பேசப்போகிறார் பீட்டர் பார்க்கர்
ஸ்பைடர்மேன் பட வரிசையில் அடுத்ததாக வெளியாக உள்ள படம், ’ஸ்பைடர்மேன் ஹோம் கம்மிங்’.
ஜூலை மாதம் வெளியாக இருக்கும் இந்தப் படமும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. ஸ்பைடர்மேன் கேரக்டரான பீட்டர் பார்க்கருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் என்பதால் பல்வேறு நாடுகளில், பல்வேறு மொழிகளில் படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.
ஸ்பைடர்மேன் பட வரிசையான, அமேஸிங் ஸ்பைடர்மேன், அமேஸிங் ஸ்பைடர்மேன் 2 படங்களில் நடித்த ஆண்ட்ரூ கார்பீல்டு அந்தப் படங்களோடு கழன்று கொள்ள, டாம் ஹாலண்ட் என்ற 20 வயதுக்காரரை அழைத்து வந்து பீட்டர் பார்க்கர் கேரக்டரில் நடிக்க வைத்திருக்கிறார்கள். மைக்கேல் கீன்டன், ஜெண்டயா உட்பட பலர் நடித்திருக்கும் இந்தப் படத்தை ஜான் வாட்ஸ் இயக்கியுள்ளார்.
இந்தியாவில் இந்தப் படத்துக்கு ஏகப்பட்ட விளம்பரம் செய்ய, சோனி நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. வழக்கமாக, இந்தி, தெலுங்கு, தமிழ் மொழிகளில் மட்டுமே படத்தை டப்பிங் செய்வார்கள். ஆனால், இந்தப் படத்தை இந்தியாவில் மட்டும் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உட்பட பத்து மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட முடிவு செய்துள்ளனர்.