போதைப்பொருள் கடத்தலில் பாகுபலி 2 நடிகரிடம் சிறப்பு விசாரணை
பாகுபலி 2 படத்தில் நடித்த நடிகரிடம் போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் 8 மணி நேரம் சிறப்பு விசாரணை நடத்தப்பட்டது.
தெலங்கானாவில் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்புடைய விவகாரத்தில் பாகுபலி 2 படத்தில் நடித்த நடிகர் சுப்பா ராஜிடம் சிறப்பு விசாரணை அதிகாரிகள் 8 மணிநேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர். இன்று நடிகர் தருணிடம் விசாரணை நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிக போதைதரக்கூடிய மருந்துகளை ஐடி ஊழியர்கள், திரைத்துறையினருக்கு ரகசிய நெட்வொர்க் மூலம் விற்பனை செய்த விவகாரம் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போதைக்கும்பலுடன் தொடர்பு உள்ளதாக இரண்டு நடிகைகள் உட்பட 12 தெலுங்கு திரைத்துறையினருக்கு சிறப்பு விசாரணை குழு சம்மன் அனுப்பியிருந்தது. இதன்படி, பாகுபலி 2 படத்தில் அனுஷ்காவின் உறவினராக நடித்திருந்த சுப்பா ராஜிடம் நேற்று விசாரணை நடந்தது. காலை தொடங்கிய விசாரணை நேற்று இரவு வரை நீடித்தது. இதேபோல நடிகர் தருண் குமார் இன்று ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் போதை ப்பொருள் விற்பனை கும்பலுடன் தொடர்பு இருந்த சந்தேகத்தின்பேரில் 17 பார்கள் மற்றும் கிளப்புகளும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

