சைலஜா டீச்சர்; ஜெய்சங்கர் எஸ்.பி.பி மறைவுக்கு இரங்கல்!
இந்தியாவின் முன்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் மறைவுக்கு கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா டீச்சரும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனாவிற்கு ஏழைப் பணக்காரர், சாதி மதம் எதுவும் தெரியாது என்பதை நிரூபிக்கும் விதமாக அனைத்து தரப்பினரையும் பாதித்து வருகிறது. அப்படித்தான், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்தமாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ்.பி பாலசுப்பிரமணியம் இன்று சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.
அவரது மறைவிற்கு அனைத்து தரப்பினரும் இரங்கல் தெரிவித்துவரும் நிலையில், கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா டீச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் ”கொரோனாவுடன் சண்டையிடுவதற்கும், பாதுகாத்துக் கொள்வதற்கும், ஒன்றாக இருப்பதற்கும் இதுவே நேரம். இந்தக் கடினமான காலங்களில் SPB இன் மெல்லிசைக் குரல் இந்த வார்த்தைகளுக்கு அதிக கவனம் செலுத்துகிறது. அவர் பாடிய பாடல்கள் நம்முடன் என்றென்றும் வாழ்கின்றன. துக்கத்தை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன். எஸ்.பி.பிக்கு அஞ்சலி” என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், ”பாடும் நிலா பத்மபூஷன் எஸ்.பி பாலசுப்பிரமணியம் மறைவு ஆழ்ந்த வருத்தமளிக்கிறது. அவர் பாடல்கள் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பலருக்கும் மகிழ்ச்சியளித்தன. அவர் மறைந்தாலும் அவரது குரல் நம்முடன் இருக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.