ஓ.டி.டி தளத்தில் அதிகளவு பார்வையாளர்களை ஈர்க்கும் தென்னிந்திய திரைப்படங்கள் - சினிமா அலசல்

ஓ.டி.டி தளத்தில் அதிகளவு பார்வையாளர்களை ஈர்க்கும் தென்னிந்திய திரைப்படங்கள் - சினிமா அலசல்
ஓ.டி.டி தளத்தில் அதிகளவு பார்வையாளர்களை ஈர்க்கும் தென்னிந்திய திரைப்படங்கள் - சினிமா அலசல்

தற்போது கொரோனா ஊரடங்கில் திரையரங்குகள் கடும் கட்டுப்பாடுகளுடன் இயங்கி வரும் நிலையில், பார்வையாளர்களின் கவனம் ஓ.டி.டி. தளங்கள் பக்கம் மாறியுள்ளது. இதில், தென்னிந்திய திரைப்படங்கள் அதிக கவனத்தை ஈர்த்துள்ளதாக கூறுகின்றனர். இதைப் பற்றிதான் நாம் இங்கு பார்க்க உள்ளோம்.

கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் முதல் தொடர்ந்து வரும் கொரோனா ஊரடங்குகளால், உலக சினிமாக்கள் குறிப்பாக இந்திய சினிமாக்கள், திரையரங்குகளை விட்டு ஓ.டி.டி. தளத்திற்கு அதிகமாக செல்லத் துவங்கியதை நாம் அனைவரும் அறிவோம். அந்த வகையில், வீட்டிலேயே அமர்ந்து தாய்மொழி படங்கள் மட்டுமல்லாது, பிற மொழிப் படங்களையும் மக்கள் அதிகமாக பார்ப்பதை பரவலாக காண முடிகிறது. இதற்கு முன்பு மற்ற மொழிகளின் மீதான ஈர்ப்பு இருந்தாலும், அந்தத் திரைப்படங்களை நம்மூர் திரையரங்குகளில் எளிதில் பார்க்க முடிவதில்லை.

என்னதான் திரையரங்குகளில் மற்ற மொழிப் படங்கள் வந்தாலும், நமது வசதிற்கு ஏற்ப சென்றுப் பார்க்க முடியாது. ஆனால் அதனை உடைத்த பெருமை ஓ.டி.டி. தளத்தையே சாரும். பொதுவாக கொரோனா காலக்கட்டத்திற்கு முன்பு பெரிதாக அறியப்படாத ஓ.டி.டி தளத்தில், இதுநாள்வரையில், இந்தி திரைப்படங்களை காட்டிலும் தென்னிந்திய படங்களுக்கு ஓ.டி.டி. உரிமை குறைவானதாகவே இருந்தது. ஆனால் 2022-ல் இந்தி படங்களை விட தென்னிந்திய படங்களுக்கு ஓ.டி.டி. உரிமையின் விலை அதிகமாகும் என, ஓ.டி.டி. தளத்தை உன்னிப்பாக கவனித்து வரும் ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏனெனில், அந்த அளவிற்கு தென்னிந்திய திரைப்படங்களின் தரமும், கதையும் அனைத்து தரப்பினரையும், பல்வேறு மொழிகள் பேசும் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பையும், தென்னிந்திய திரைப்படங்கள் பூர்த்தி செய்து வருவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக கடந்த 2021-ல் வெளியான தென்னிந்திய திரைப்படங்கள் மற்றும் அதன் மொழிமாற்றம் செய்யப்பட்டவையும் சேர்த்து, பெரும்பாலான படங்கள், வட இந்திய பார்வையாளர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதனால், தென்னிந்திய திரைப்படங்கள், ஓ.டி.டி. தளத்தில் சராசரி பார்வையாளர்களை விட, 10 சதவீதம் அதிகமான பார்வையாளர்களை பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

அதிலும், வட மாநிலங்களான மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், மொழிமாற்றம் செய்யப்பட்ட தென்னிந்திய திரைப்படங்கள் 75 சதவீத பார்வையாளர்களை பெற்றுள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாக, ஓ.டி.டி. தள நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். சமீபத்தில், பிரபல ஓ.டி.டி தளமான நெட்பிளிக்ஸில் வெளியான ‘மின்னல் முரளி’ எனும் மலையாளத் திரைப்படம், ஆங்கிலம் அல்லாத திரைப்படங்களில் டாப் 10 வரிசையில் ஒன்றாக இருப்பதாகவும், 5.9 மில்லியன் பார்வையாளர்கள் இதுவரை பார்த்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், அமேசான் பிரைமில் கடந்த ஆண்டு வெளியான ‘ஜெய்பீம்’, ‘சார்பட்டா பரம்பரை’, ‘சூரரைப் போற்று’ போன்ற படங்களும் வெளியான சிலமணி நேரங்களிலேயே அதிக பார்வையாளர்களை பெற்றதாகவும், ஓ.டி.டி தள நிர்வாகிகள் கூறியுள்ளனர். இந்த வரவேற்பு காரணமாக, பிரம்மாண்ட பொருட்செலவில், ராஜமௌலியின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம், திரையரங்குகளில் வெளியிடப்பட்டதும், அந்த திரைப்படத்தை, ஸ்பானிஷ், போர்த்துக்கீஸ் மற்றும் கொரியன் மொழிகளில் மொழிமாற்றங்கள் செய்து நெட்பிளிக்ஸில் வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

உதாரணமாக தமிழ் ஆந்தாலஜி படமான ‘நவரசா’ நெட்பிளிக்ஸில் வெளியான ஒரு வாரத்தில், 40 சதவீத வெளிநாட்டு பார்வையாளர்களை பெற்றுள்ளது. கடந்த வருடத்தில் மட்டும், ‘நயட்டு’ (Nayattu - Malayalam), ‘அந்தகாரம்’ (Andhaghaaram - Tamil), 'பிட்டா கதலு' (Pitta Kathalu - Telugu), ‘பாவ கதைகள்’ (Paava Kadhaigal - Tamil), ‘சினிமா பண்டி’ ( Cinema Bandi - Telugu), ‘மண்டேலா’ (Mandela - Tamil) உள்ளிட்ட தென்னிந்திய திரைப்படங்கள் இந்திய அளவில் ஓ.டி.டி. தளத்தில் முதல் 10 இடங்களில் இடம் பிடித்துள்ளது.

நெட்பிளிக்ஸ் இந்திய நிறுவனத்தின் இயக்குநர், திரைப்படம் மற்றும் உரிமையாளரான பிரதிக்ஷா ராவ் தெரிவிக்கையில், இந்தியாவில் ஓ.டி.டி.தளங்கள், புதிய திறமையாளர்களுக்கு தங்கள் கதைகளை உலகத்துடன் பகிர்ந்து கொள்ள பெரும் வாய்ப்பை வழங்கியுள்ளது. “தென்னிந்தியாவைச் சேர்ந்த புதிய தலைமுறையின், நம்பமுடியாத திறமையான நட்சத்திர நடிகர்கள் மற்றும் கதைமாந்தர்களின் (இயக்குநர்கள்) கதைகளைப் பெறுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். புதுமையான வகைகளில் தங்களுடைய கலாச்சாரத்தையொட்டிய கதைகளுடன், புதிய மாறுபாடுகளுடன் தரமான படங்களை, அவர்கள் தொடர்ந்து இயக்கி வருகின்றனர்" என தெரிவித்துள்ளார்.

இதனால், தாய்மொழியில் மட்டுமில்லாது, நல்ல திரைப்படங்களை மொழிமாற்றம் செய்து வெளியிடுவதிலும், ஓ.டி.டி. தளங்கள் ஆர்வம் காட்டி வருவதாக பிரதிக்ஷா ராவ் தெரிவித்துள்ளார். இன்னொரு ஓ.டி.டி. தளமான பிரைம் வீடியோ இந்தியாவின் திரைப்பட உரிமை தலைவரான மணீஷ் மெங்கானி கூறுகையில், ‘தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளிவரும் திரைப்படங்களுக்கு, 50% பார்வையாளர்கள் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அல்லாமல், வெளியே இருந்து பார்க்கும் பார்வையாளர்களாக இருக்கிறார்கள். தென்னிந்திய திரைப்படங்களை, அதன் உள்ளூர் பார்வையாளர்களையும் சேர்த்து, உலகளவில் 170-க்கும் மேற்பட்ட நாடுகளில், 20 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் பார்க்கின்றனர்.

பிராந்திய திரைப்படங்கள், குறிப்பாக தென்னிந்திய மொழிகளில் இருந்து வரும் திரைப்படங்கள், உலகம் முழுவதும் பார்வையாளர்களை ஈர்ப்பதாக, ஓர்மேக்ஸின் ஊடக ஆலோசனை நிறுவனத்தின் பங்குதாரரான கௌதம் ஜெயின் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், அவர் கூறுகையில், “தென்னிந்தியாவில் இருந்து வரும் ஒவ்வொரு மொழி சார்ந்த படங்களும், தங்களது பாரம்பரியங்கள், கலாச்சாரம், இருப்பிடங்கள் மற்றும் பலவற்றை முன்னிலைப்படுத்தும் தனித்துவமான திரைப்படங்களை வழங்குவதே இதற்குக் காரணம். தென்னிந்திய மக்கள், உலகம் முழுவதும் அதிக எண்ணிக்கையில் உள்ளதும் இதற்கு காரணம். இதனால் முன்னணி ஓ.டி.டி. தளங்கள், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இருந்து தயாராகும் திரைப்படங்களை அதிகளவில் வாங்கி வருகின்றன" என்று கௌதம் ஜெயின் தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய திரைப்படங்கள் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படும்போது, குறிப்பாக ‘பண்டா நாம்மா சரீநோது’ (Sarrainodu), ‘கைதி’ (Kaithi), ‘ஜங்கிள்’ (Jungle), ‘வட சென்னை’ (Chennai Central) படங்கள், மற்ற படங்களைவிட அதிகளவில் பார்வையாளர்களை ஈர்ப்பதாக, ஓ.டி.டி. தளங்களில் ஒன்றான எம்.எக்ஸ். பிளேயரின் தலைவர் மான்சி ஸ்ரீவஸ்தவா கூறியுள்ளார். தென்னிந்திய மொழிகளிலும், தெலுங்கு மற்றும் தமிழ் படங்கள் மற்றும் அதன் மொழி மாற்றப்படங்களை அதிகளவில் விற்பனை செய்யவும் ஓ.டி.டி. தளங்கள் திட்டமிட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், "பாலிவுட் திரைப்படங்களைவிட, தென்னிந்திய சினிமா பல புதுமைகளையும், சுவாரஸ்யம் மிக்க கதைகளையும் கொண்டுள்ளது. அதிக அளவில் வாழ்க்கை வரலாறு மற்றும் போர்க்களங்கள் நிறைந்த படங்களை தென்னிந்திய இயக்குநர்கள் எடுக்கின்றனர். அவர்களின் இசையும், தயாரிப்பும் பிரமிப்பூட்டும் வகையில் இருக்கிறது. அதுமட்டுமின்றி அனைத்து விதமான சண்டை, நகைச்சுவை, நாடகம் என எல்லா வகையான அம்சங்களையும் அடக்கிய ஒரு படத்தை தருகின்றனர்" என்று அவர் தெரிவித்தார். இதனால், எல்லா வகையான பார்வையாளர்களையும் கவரும் வகையில் இருப்பதால் அதிகளவில் பார்வையாளர்களை ஈர்க்க முடிகிறது என்று மான்சி ஸ்ரீவஸ்தவா கூறியுள்ளார்.

ஜு5 (ZEE5) இந்தியாவின் தலைமை வணிக அதிகாரி மணீஷ் கல்ரா கூறுகையில், “கடந்த காலாண்டில் தென்னிந்திய மொழிகளில் உருவான திரைப்படங்கள் மற்றும் அதன் மொழி மாற்றம் செய்யப்பட்ட படங்கள் இரண்டிலும், ஏற்கனவே அளிகளவில் பார்வையாளர்களை பெற்றுள்ளது. இதனால் ஓ.டி.டி. தளத்தில் இந்தத் திரைப்படங்களை வெளியிடுவதில் நான்கு மடங்கு அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. கதைகள் மிகவும் நன்றாக இருந்தால், மொழிகள் ஒரு முக்கியமில்லை என்பதை நாங்கள் கவனித்துள்ளோம்" என கல்ரா கூறியுள்ளார். குறிப்பாக, ஆபரேஷன் ஜாவா (Operation Java), ரிபப்ளிக் (Republic) மற்றும் அரண்மனை 3 (Aranmanai 3) போன்ற படங்கள் ஓ.டி.டி. தளத்தில் பெரிய வெற்றிப் படங்களாக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

"தென்னிந்திய திரைப்பட சந்தையில் ஒரு வலுவான திரைப்பட உறவு வருகிறது என்பதையும், கலாச்சார திரைப்படங்கள் அதிக இதயங்களை வெல்ல முனைவதையும் நாங்கள் கவனித்தோம். தென்னிந்தியத் திரையுலகம் உலகிலேயே மிகவும் பரிணாம வளர்ச்சி பெற்ற ஒன்றாக இருக்கிறது..." என்று அவர் மேலும் கூறியுள்ளார். ஓ.டி.டி. தளத்திற்கு, இந்தி படங்களை பெறும்போது தொடக்கத்தில் இருந்ததை விட, மிகக் குறைவாக இருந்த தென்னிந்தியப் படங்களுக்கான கையகப்படுத்தல் விலை, 2022-ல் அதிகமாக இருக்கும் என்று ஊடக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். ஏனெனில், தென்னிந்திய திரைப்படங்கள், மற்றவற்றை விட சிறப்பாக இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். இதன்மூலம் பல புதிய மொழிகளில் தென்னிந்திய திரைப்படங்கள் மொழி மாற்றம் செய்யப்படுவதற்கு இது உதவுவதாகக் கூறப்படுகிறது.

- சங்கீதா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com