போதும்னு நினைக்கணும்: சவுந்தர்யாவுக்கு ரஜினி அட்வைஸ்!
சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள, ’விஐபி 2’ படம் அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது. சென்சாரில் இந்தப் படத்துக்கு யு சான்றிதழ் கிடைத்திருக்கிறது. படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஐதரபாத்தில் நேற்று நடந்தது. படம் பற்றி தனுஷ், படத்தில் வில்லியாக நடித்துள்ள கஜோல், இயக்குனர் சவுந்தர்யா ரஜினிகாந்த் பேசினர்.
சவுந்தர்யா கூறும்போது, ‘இந்தப் படத்தை திட்டமிட்டபடி 50 நாளில் முடித்துள்ளோம். அடுத்து என்ன படம் இயக்கப் போகிறீர்கள் என்று கேட்கிறார்கள். இன்னும் முடிவு செய்யவில்லை. அஜீத்தை வைத்து படம் இயக்கும் ஆசை இருக்கிறது. அப்பாவிடம் இருந்துதான் பல விஷயங்களைக் கற்று வருகிறேன். ஒரு படைப்பாளிக்குத் திருப்தி என்பது வரவே வராது. ஒரு கட்டத்தில் போதும் என்று நினைக்க வேண்டும். அப்போதுதான் படம் நன்றாக வரும் என்று சொல்வார் அவர். அதுதான் உண்மை. வீட்டில் பல விஷயங்கள் பேசுவோம். என் கருத்துக்களையும் கேட்பார். ஆனால் எந்த முடிவையும் அவர்தான் எடுப்பார்’ என்றார் .