கொரோனா கால உதவி; சோனு சூட்டின் படத்தை விமானத்தில் பதிந்து பெருமைப்படுத்திய ஸ்பைஸ் ஜெட்!
ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் தனது விமானம் ஒன்றில் சோனு சூட்டின் படத்தை பதிந்து அவரது கொரோனா கால உதவிகளை பெருமைபடுத்தியுள்ளது.
சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் பரவத் தொடங்கியது. அதனால், மார்ச் 22 ஆம் தேதிமுதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. போக்குவரத்து அனைத்தும் தடை செய்யப்பட்டதால் புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவரும் நடந்தே சென்றார்கள்.
அவர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைத்து பேருதவி செய்தார் நடிகர் சோனு சூட். அதேபோல, வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மாணவர்களை சொந்த செலவிலேயே விமானத்தில் இந்தியா கொண்டு வந்தார். மேலும், ட்விட்டரில் பல்வேறு கோரிக்கை வைத்து உதவி கேட்கும் ஏழைகளுக்கு அவ்வவ்போது உதவி வருகிறார்.
இந்நிலையில், அவரை பெருமைப்படுத்தும் விதமாக ஸ்பைஸ் ஜெட் விமானம் தனது போயிங் விமானத்தில் சோனு சூட்டின் முகத்தை பதித்து ‘கோரோனா சமயத்தில் சோனு சூட் பல லட்ச இந்தியர்களுக்கு உதவியிருக்கிறார். அவரின் மகத்தான முயற்சிகளுக்கு ஸ்பைஸ் ஜெட்டின் நன்றி” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இதனை சோனு சூட் தனது ட்விட்டர் பக்கத்தில் ”தான் மும்பைக்கு முன்பதிவு செய்யாத ரயிலில் பயணம் செய்தாதாகவும், இந்நேரத்தில் தனது பெற்றோரை மிஸ் செய்வதாகவும்” நெகிழ்ச்சியுடன் பகிர்ந்திருக்கிறார்.