சேலை கட்டி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்ததால் உண்மையான முஸ்லீம் இல்லை என நடிகை சோஹா அலிகானுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கண்டனக்குரல்கள் எழுந்துள்ளன.
பாலிவுட் நடிகை சோஹா அலிகான் பெங்காலி பாரம்பரியத்தில் சேலை கட்டி பொட்டு வைத்து இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்ட்ராகிராமில் பதிவிட்டிருந்தார். 38 வயதான அவர் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இந்நிலையில் பிங்க் நிற சேலைகட்டி தனது கணவர் குணால் கேமுவுடன் போஸ் கொடுத்திருந்தார். அந்தப்புகைப்படங்களை கண்டு அதிர்ச்சியடைந்த முஸ்லிம்கள் பலர் ‘சோஹா அலிகான் உண்மையான முஸ்லீம் அல்ல’ என கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
அவரது தாய் ஷர்மிளா தாகூர் பெங்காலி என்பதையும் சுட்டிக்காட்டி சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். ஈகை பண்டிகையை ஒட்டி இந்த புகைப்படங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதால் அவை சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. ஈகை பண்டிகையின் போது முஸ்லீம் பெண்கள் சேலை அணிய மாட்டார்கள். பெண்கள் வாழ்த்து சொல்லும் வழக்கமும் இல்லை என்பதால் அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. சோஹா அலிகானை முஸ்லீமாக ஏற்றுக்கொள்ளக் கூடாது, அவரை ஒதுக்கி வைக்க வேண்டும் என ட்விட்டர்களில் பலர் பொங்குகின்றனர். அதேவேளையில் அவருக்கு ஆதரவான கருத்துக்களையும் பலர் பதிவிட்டுள்ளனர்.
இதனிடையே இதுகுறித்து இன்ஸ்ட்ராகிராமில் பதிலளித்துள்ள சோஹா அலிகான் ‘ நான் எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் அதிகம் நேசிக்கிறேன். அவர்கள் கேட்டுக்கொண்டதால் சேலை அணிந்தேன்’ என அவர் தெரிவித்துள்ளார்.
சாயிஃப் அலிகானின் சகோதரி இந்த சோஹா அலிகான். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் நவாப் பட்டோடி- ஷர்மிளா தாகூர் தம்பதியின் மகள் இவர்.