நடிகர் விஜய் முதலமைச்சர் ஆனால் மகிழ்ச்சி: எஸ்.ஜே.சூர்யா
நடிகர் விஜய் முதலமைச்சரானால் மகிழ்ச்சி அடைவேன் என்று இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே. சூர்யா கூறியுள்ளார்.
தமிழக அரசியல் வரலாற்றில் சினிமா துறையில் இருந்து எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் முதலமைச்சர்களாக உருவாகி இருக்கிறார்கள். தற்போது, ரஜினி மற்றும் கமல் இருவரும் அரசியலுக்கு வருவது குறித்து வெளிப்படையாக பேசிவருகின்றனர். அதேபோல், நடிகர் விஜய்யும் அரசியலுக்கு வரவுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வந்தன. இதனிடையே சினிமா துறையில் இருந்து மீண்டும் தமிழக முதல்வர் உருவாவதற்கு சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் விஜய் முதலமைச்சர் ஆக வேண்டும் என்று எஸ்.ஜே.சூர்யா கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “சினிமா துறையில் இருந்து முதலமைச்சர் ஆக கூடாது என்று சட்டமா உள்ளது. இவர் வரலாம் வரக்கூடாது என்ற சட்டம் உள்ளதா?. இது சுதந்திர இந்தியா. யார் வேண்டுமென்றாலும் என்ன வேண்டுமென்றாலும் ஆகலாம். நல்லது பண்ணனும். தரமாக பண்ணனும். ஒரு சிறந்த முதலமைச்சராக விஜய் வந்தால் வேண்டாம் என்றா சொல்ல போகிறோம். அவருடன் பழகி இருக்கேன். தனக்கு கொடுத்த வேலையை பொறுப்பாக செய்வார். நல்ல எண்ணம் கொண்டவர். ஒரு நண்பராக விஜய் முதலமைச்சர் ஆனால் மகிழ்ச்சி” என்றார்.

