தணிக்கைச் சான்றிதழ் | ஜனநாயகனைத் தொடர்ந்து பராசக்திக்கும் சிக்கல்? ஜன. 10 படம் ரிலீஸாகுமா?
விஜயின் ஜனநாயகனைத் தொடர்ந்து தணிக்கைச் சான்றிதழ் தொடர்பாக சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ‘பராசக்தி’ படத்திற்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கியுள்ள படம் `ஜனநாயகன்'. விஜயின் கடைசிப் படமான இது நாளை (ஜனவரி 9) உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தச் சூழலில் இப்படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்குவதில் தொடர்ந்து இழுபறி நடந்துவருகிறது. தணிக்கைச் சான்றிதழ் பெறுவதற்கு கடந்த டிசம்பர் 19ஆம் தேதி சென்சாருக்கு அனுப்பப்பட்டது, படத்திற்கு U/A சான்றிதழையும் பரிந்துரைக்கப்பட்டது, ஆனால் தற்போதுவரை தணிக்கைச் சான்று தரப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தயாரிப்பு நிறுவனம் தரப்பில், சில காட்சிகளை நீக்கினால் யு/ஏ சான்றிதழ் வழங்கப்படும் என மத்திய தணிக்கை வாரியம் கூறியதாகவும் அதனைப் படக்குழு செய்ததாகவும், ஆனால் அதன்பின்பும் சான்றிதழ் வழங்கப்படவில்லை என்று கூறப்பட்டது. இந்த நிலையில்தான், ’ஜனநாயகன்’ படம் நாளை (ஜனவரி 9) வெளியாகாது என ஜனநாயகன் படத் தரப்பிலிருந்து நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே இதுதொடர்பான வழக்கின் தீர்ப்பு, நாளை காலை 10.30 மணிக்கு வழங்கப்பட இருக்கிறது.
இந்த நிலையில், தணிக்கைச் சான்றிதழ் தொடர்பாக சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ‘பராசக்தி’ படத்திற்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படம், நாளை மறுநாள் (ஜனவரி 10) வெளியாக இருக்கும் நிலையில், இன்னும் தணிக்கைச் சான்று வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. முன்னதாக, இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. ஆனால், இன்னும் அதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை எனச் சொல்லப்படுகிறது. இதையடுத்து, விஜயின் ஜனநாயகனைப்போல பராசக்தியும் சிக்கலை எதிர்கொண்டுள்ளது. நாளைக்குள் இப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்பட்டால், பிரச்னை சுலபமாக முடிந்து, சொன்ன தேதியில் படம் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

