சிவகார்த்திகேயன் புதிய படத்திற்கு ஹீரோயின் ரெடி
புதியதாக சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள திரைப்படத்திற்கு ரகுல் ப்ரீத் சிங் ஹீரோயினாக உறுதியாகியுள்ளார்.
தற்சமயம் சிவகார்த்திகேயன் ‘சீமராஜா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்தப் படத்தை பொன்ராம் இயக்கியுள்ளார். விரைவில் இந்தப் படம் திரைக்கு வர இருக்கிறது. இதனை அடுத்து இளம் இயக்குநர் ரவிக்குமார் இயக்க உள்ள திரைப்படத்தில் சிவா ஒப்பந்தமாகியுள்ளார். இதனை 24 ஏஎம் ஸ்டூடியோஸ் தயாரிக்க உள்ளது. தொடர்ந்து இந்த நிறுவனம் தயாரிக்கும் படங்களில் மட்டுமே சிவா நடித்து வருகிறார். ஆகவே இது அவருடைய சொந்த நிறுவனம்தான் என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்தப் புதிய படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார். நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.
இதற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. ஆகவே ‘எஸ்கே13’ என்று இதற்கு இப்போதைக்கு தலைப்பிட்டிருக்கிறார்கள். டைம் ட்ராவல் கதையை வைத்து ‘நேற்று இன்று நாளை’ இயக்கிய இயக்குநரின் அடுத்தப் படைப்பு என்பதால் இதற்கு தமிழ் சினிமா இண்டரஸ்ரியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் முறைப்படி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.