நடிகர் விஜய் சேதுபதி நடித்து வரும் ’சூப்பர் டீலக்ஸ்’படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை ரம்யா கிருஷ்ணன் ஒப்பந்தமாகியுள்ளார்.
சில வருடங்களுக்கு முன்பு வெளியான ’ஆரண்ய காண்டம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா. இவரின் முதல் படத்திற்கு பிறகு இவரின் அடுத்த திரைப்படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், நீண்ட இடைவெளியிக்குப் பிறகு இவர், விஜய் சேதுபதியை வைத்து ‘அநீதி கதைகள்’ என்ற படத்தை இயக்குவதாக அறிவித்தார்.
அதன் பின்பு, இந்தப் படத்திற்கு ’சூப்பர் டீலக்ஸ்’ என்று பெயர் மாற்றப்பட்டது. இதில் சமந்தா, மிஷ்கின் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க முதலில் நடிகை நதியா ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதன் பின்பு, பல்வேறு காரணகளால் நதியா இந்தப் படத்தில் இருந்து விலகினார். இந்நிலையில், நதியாவின் கதாபாத்திரத்திற்கு நடிகை ரம்யா கிருஷ்ணனை இயக்குநர் ஒப்பந்தம் செய்துள்ளார். கதாபாத்திரத்திற்கு ரம்யா கிருஷ்ணன் பொருத்தமாக இருப்பார் என்பதால் அவரை தேர்வு செய்து உள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார். பாகுபலி படத்திற்கு பின் நேர்த்தியான திரைக்கதை கொண்ட படங்களை தேர்வு செய்து ரம்யா கிருஷ்ணன் நடித்து வருகிறார். இந்நிலையில், திரையரங்குகளில் வெற்றிக்கரமாக ஓடிக் கொண்டிருக்கும் ’தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் பெரிதளவில் பேசப்பட்டு வருகிறது.