‘சீதா ராமம்’.. ஆச்சரியமான திருப்பங்கள்.. கவிதையாய் காதல் காட்சிகள்.. ஆனால் ஏதோ மிஸ்ஸிங்!

‘சீதா ராமம்’.. ஆச்சரியமான திருப்பங்கள்.. கவிதையாய் காதல் காட்சிகள்.. ஆனால் ஏதோ மிஸ்ஸிங்!
‘சீதா ராமம்’.. ஆச்சரியமான திருப்பங்கள்.. கவிதையாய் காதல் காட்சிகள்.. ஆனால் ஏதோ மிஸ்ஸிங்!

ஒரு நல்ல திரைப்படம் என்பது படம் முடிந்த பிறகும் சில நாட்களுக்காவது மனதைவிட்டு நீங்காத சில அழுத்தமான காட்சிகளை கொண்டிருக்க வேண்டும். படத்தின் பெரும்பகுதி அப்படி அமைந்துவிட்டால் உண்மையில் அது ஒரு எபிக் படம் தான். அப்படியான ஒரு முயற்சிதான் ‘சீதா ராமம்’. அதற்கு உதாரணமாக ஒரு காட்சியை நாம் பார்க்கலாம்.

என்னதான் இது காதல் காட்சிகள் ததும்பும் படமாக இருந்தாலும், காதலை தாண்டி மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தியது இந்த காட்சிதான். இந்தக் காட்சிக்கான அடித்தளம் முதலிலேயே போடப்பட்டிருக்கும். பின்னர் அந்த காட்சி ஓர் இடத்தில் தொடரும் போது ஹீரோவின் கண்களை மட்டுமல்ல நம் கண்களையும் தான் குளமாக்கிவிடுகிறது. அதனால், அந்த காட்சியை முழுமையாகவே பார்க்கலாம்.

காஷ்மீரில் மக்களை பிளவுப்படுத்தி கலவரத்தை உருவாக்க நினைக்கும் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் சதியை முறியடித்த இந்திய ராணுவத்தை சேர்ந்த வீரர்கள் ஹீரோக்களாக மாறினர். அந்த வீரர்களை பத்திரிக்கையாளராக வரும் ரோகிணி பேட்டி எடுப்பார். பேட்டியின் நடுவே ராணுவ லெப்டினண்ட் ஆக இருக்கும் ராம் (துல்கர் சல்மான்) தனக்கென யாரும் இல்லை என சொல்லியிருப்பார். பின்னர், வானொலியில் பேசும் ரோகிணி தன்னுடைய பேட்டி அனுபவத்தையும் அதில் ராமின் நிலையையும் சொல்லி உருக்கமாக பேசுவார். அவர் பேசிய பின்னர் லெப்டினண்ட் ராமுக்கு நாடு முழுவதும் கடிதங்கள் வந்து குவியும். அதுவரை அவருக்கு கடிதமே வராது. எல்லோரும் ராமை உறவு சொல்லி உருக்கமாக கடிதம் எழுதியிருப்பார்கள். அதில் ஒரு கடிதத்தில் ராமை அண்ணன் முறையில் அழைத்து ஒரு பெண் கடிதம் எழுதியிருப்பார். உங்களுக்கு யாரும் இல்லை என நினைக்க வேண்டாம். உங்களுக்காக ஒரு தங்கை இருக்கிறேன். உங்களுக்கு மருமகனும் இருக்கிறான். நீங்கள் என்னை நேரில் வந்து சந்திக்கும் போது உங்கள் மருமகனுக்கு காது குத்தலாம் என்பது போல் அன்பு பொங்க அந்த கடிதத்தை எழுதியிருப்பார். அந்த கடிதத்துடன் அதிரசம் செய்து அனுப்பி இருப்பாள் அந்தப் பெண்.

பின்னர், தனக்கு காதல் கடிதம் எழுதிய பெண்ணை தேடியும், கடிதங்கள் எழுதியிருந்த மற்றவர்களில் சிலரையாவது சந்திக்க வேண்டும் என்று விடுப்பு எடுத்துக் கொண்டு ஹைதராபாத் செல்வார் ராம். காதலியை கண்டுபிடித்தபின்னர், அவரையும் அழைத்துக் கொண்டு அந்த பெண்ணின் வீட்டிற்கு செல்வார். அந்தக்காட்சி இப்படித்தான் ஆரம்பிக்கும், கதவிற்கு வெளியே ராம். உள்ளே குழந்தையை தூளியில் தாலாட்டியபடி அந்த பெண். வெளியில் இருந்து குரல் கொடுக்கிறான் ராம். யார் என்று கவனிக்காமலேயே,, ‘நீங்கள் எவ்வளவு நேரம் இருப்பீர்கள்.. இன்றே சென்றுவிடுவீர்களா..’ என்றெல்லாம் பேசுகிறாள். அப்போதுவரை அவள் அவனை பார்க்கவில்லை. பின்னர், அவன் உள்ளே வர பார்த்ததும் அதிர்ச்சி ஆகிறாள். இது இன்ப அதிர்ச்சி. அவள் முகத்தில் அவ்வளவு சந்தோஷம். வந்துட்டுயா அண்ணா என அன்போடு அவனை வரவேற்கிறாள். பாலியல் தொழிலில் தன் வாழ்க்கை சிக்கிக் கொண்டதை வேதனையோடு அவனிடம் சொல்கிறாள். குழந்தைக்காக தான் வாழ வேண்டிய கட்டாயத்தை போகிற போக்கில் சொல்லிவிட்டு அவனை மீண்டும் விசாரிக்கிறாள். வார்த்தைகளின்றி திகைத்துபோய் நிற்கிறான் ராம். அவனைப் போலவே பார்க்கும் நாமும் நிச்சயம் திகைத்து போயிருப்போம். தன்னுடைய துயரமான வாழ்க்கையையும் மறந்து அவனுடன் உரையாடுவாள். நீ எத்தனை நாள் இங்கு இருப்பாய் அண்ணா.. மருமகனுக்கு சடங்கு செய்துவிடலாம் என அவள் கேட்பாள். ஆனால், அதற்கு பிறகு நடப்பது இன்னும் அழுத்தமாக இருக்கும்.

அந்த நரகத்தில் இருந்து அவளை விடுவிக்கவே அவன் அங்கு வந்திருக்கிறான் என்பது அப்பொழுதுதான் அவளுக்கு புரிந்தது. ஆனால், அவளையும் குழந்தையையும் அழைத்துச் செல்லும் போது அவளை வைத்து பிழைப்பு நடத்தும் பெண்மணி தடுப்பாள். இவளை நிறைய பணம் கொடுத்து வாங்கினேன் என உரைப்பாள். சற்றும் யோசிக்காமல் தனது வங்கிக் கணக்கில் உள்ள பணம் அனைத்தையும் அந்த பெண்மணியிடம் கொடுத்துவிட்டு அவளை சுதந்திர உலகத்திற்கு அழைத்துச் செல்வான். இந்தக் காட்சிக்கு முன்னும் பின்னும் வரும் காட்சிகளோடு இந்த காட்சியை இணைத்து பார்க்க வேண்டும். அதற்கு முந்தைய காட்சியில் தான் தன்னிடம் சேமிப்பு பணம் 12 ஆயிரம் ரூபாய் இருக்கிறது. அதனை வைத்து ஒரு வீடு கட்டிக் கொள்ளலாம். மாதம் 600 ரூபாய் வருமானம் வருகிறது. உன்னை நல்ல படியாக பார்த்துக் கொள்வேன். கவலைப்படாதே என காதலியிடம் சொல்லியிருப்பார். மறுநாளே அக்கவுண்ட்டில் இருந்த பணமெல்லாம் காலி. பின்னர், காதலியிடம் தன்னுடைய வருத்தத்தை பகிர்ந்து கொள்வான். வாடகை வீடு உனக்கு ஓகே தானே என கேட்பான். நரகத்தில் இருந்து விடுதலை கொடுத்து அழைத்து வந்த அந்த பெண்ணிற்கு மிகப்பெரிய வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பாள் ராமின் காதலி.

கவிதையாய் வரும் காதல் காட்சிகள்!

சீதா ராமம் படமே ஒரு அழகான காதல் கவிதையை போல்தான் இருக்கிறது. படத்தில் அடிக்கடி வாசிக்கப்படும் கடிதங்கள் கவிதைபோல் இருப்பது அதன் காரணமாக இருக்கலாம். கடிதத்தை தாண்டியும் பல காதல் வசனங்கள் நம் இதயங்களை ஆட்கொண்டு விடுகிறது. அத்துடன், காட்சி அமைப்புகளும், பின்னணி இசையும் நம்மை ஓர் அற்புதமான உணர்வுக்குள் அழைத்துச் சென்றுவிடுகிறது. அதற்கு அந்த வண்ணத்துப்பூச்சிகளை மேஜிக் ஷோவிலும் காதலியின் வீட்டிலும் பறக்கவிட்டிருக்கும் காட்சிகளை சொல்லலாம். அவ்வளவு வண்ணமயமாக காட்சிகளை தொழில்நுட்ப கலைஞர்கள் வடிவமைத்து இருப்பார்கள். சீதா மகாலட்சுமிக்காக ராமும், ராமிற்காக சீதா மகாலட்சுமி என்கின்ற நூர் ஜகானும் உருகும் காட்சிகள் அழகான கவிதையே. காதலனிடம் உண்மையை சொல்லவும் முடியாமல், வீட்டில் இருக்கும் பிரச்னைகளையும் சமாளிக்கவும் முடியாமல் அவ்வளவு அற்புதமாக நடித்திருக்கிறார் சீதா மகாலட்சுமியாக, நூர் ஜகானாகவே வாழ்ந்திருக்கும் நடிகை மிருணாள் தாக்கூர்.

ஆச்சரியமான திருப்பங்கள்

படம் என்கேஜ் ஆக இருப்பதற்கு முக்கியமான காரணமே முக்கியமான நேரங்களில் வரும் ஷாக் கொடுக்கும் திருப்பங்கள்தான். சீதா மகாலட்சுமி, ராமிடம் இருவரும் முதல் முதலாக சந்தித்த தருணத்தை விவரிக்கும் விதமும் அந்த காட்சியும் முக்கியமான திருப்புமுனை. இடைவேளையின்போது சீதா மகாலட்சுமி யார் என்பதை சொல்லியிருப்பது முக்கியமான திருப்புமுனை. அதுவரை வந்த கதையின் அர்த்தமே வேறு மாதிரியாக மாறிவிடுகிறது. கடைசியில் ராம் அனுப்பிய கடிதத்தில் இணைத்திருக்கும் அந்த பத்திரிக்கை செய்தி உட்பட பல ஷாக் கொடுக்கும் ட்விஸ்ட்டுகள் படத்தில் இடம்பெற்றிருக்கும். குறிப்பாக ராம் உயிரோடு இருக்கிறாரா? அவருக்கு என்ன ஆனது என்பதை இறுதிவரை சஸ்பென்ஸ் ஆக கொண்டு வந்து கட்சியில் தெளிவுபடுத்துகிறார்கள். அது நம்மை கனத்த இதயத்துடன் திரையரங்கை விட்டு வெளியேற வைக்கிறது.

சிறப்பான டப்பிங் படம்:

டப்பிங் படம் என்பதே தெரியாத அளவிற்கு கதைக்குள் நம்மை அழைத்துச் சென்றுவிடுவதுதான் ஒரு சிறந்த டப்பிங் படத்திற்கான அழகு. அப்படித்தான் சிறப்பாக படத்தை டப்பிங் செய்திருக்கிறார்கள். பாடல்கள், வசனங்கள் எல்லாமே கவனமாக கையாண்டு இருக்கிறார்கள். பிரகாஷ் ராஜ், கௌதம் மேனன், ரோகிணி இவர்கள் இடம்பெற்றிருப்பது நேரடியாக நம்மை கனைக்ட் செய்துவிடுகிறது. துல்லியமாக குரல் அசைவுகள் ஒத்திருக்கின்றன. பல படங்களில் இது மிஸ் ஆகிவிடும். காதல் காட்சிகள், உணர்வுபூர்வமான காட்சிகள், கதையோடு அமைந்த நகைச்சுவை காட்சிகள் இவையெல்லாம் கதையோடு ஒன்ற வைத்துவிடுவதால் டப்பிங் பட பீலே இல்லை.

இரண்டாவது ஹீரோயின் ராஷ்மிகா;

தெலுங்கை தாண்டி பல மொழி படங்களில் ஹீரோயினாக அசத்தி வருபவர் ராஷ்மிகா. ஹீரோயினாக உச்சத்தில் வலம் வரும் அவர் இந்தப் படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்தது துணிச்சலான முடிவுதான். ஆனாலும், படத்தையே நகர்த்திக் கொண்டு போவது அவரது கதாபாத்திரம்தான். தொடக்கம் முதல் இறுதிவரை அவர் வருகிறார். முதல் காட்சியிலே காரை அவர் கொளுத்துவதும், அந்த செயலுக்காக மன்னிப்பு சொல்ல கேட்கும், பல்கலைக் கழக உரிமையாளரிடம் தில்லாக அதெல்லாம் முடியாது என சொல்வதும் அசத்தலான நடிப்பு. செம்ம கேசுவலாக நடித்து இருப்பார். தொடக்கத்தில் இருந்து அவருடைய கதாபாத்திரத்தில் மெல்ல மெல்ல மாற்றங்களை கொண்டு வந்து க்ளைமேக்ஸில் வேறுமாதிரியான மாற்றத்துடன் முடித்து இருப்பார்கள்.

காஷ்மீர் கதைக்களம்

என்னதான் காதல் படமாக இருந்தாலும், காதல் காட்சிகளே நிரம்பி இருந்தாலும் அடிப்படையில் ஒரு காஷ்மீர் பிரச்னையை பேசும் படம் தான். கதையின் பிளாட் அதன் மேல்தான் பயணிக்கிறது. காஷ்மீர் பிரச்னையை விவாதிப்பது என்பது மிகவும் சிக்கலான விஷயம். காஷ்மீர் மக்களையும் தவறாக பேசிவிடக் கூடாது. இந்திய ராணுவத்தையும் தவறாக பேசிவிடக் கூடாது. இந்து முஸ்லீம் பிரச்னையையும் சரியாக கையாள வேண்டும். இந்த சிக்கல் படத்தில் நன்றாகவே தெரிகிறது. இருக்கவே இருக்கு பாகிஸ்தான் வெறுப்பு. பாகிஸ்தான் வெறுப்பு பிரச்சாரத்தைதான் யாரும் கேள்விக்குள்ளாக்க மாட்டார்களே. படத்தை பார்த்து முடித்த பிறகு நிச்சயம் பாகிஸ்தான் வெறுப்பு உணர்வு எழுவதை தவிர்க்கவே முடியாது. இந்திய ராணுவத்தில் ஒரு கருப்பு ஆடாக பிரிகேடியர் விஷ்ணு கதாபாத்திரம், பாகிஸ்தான் ராணுவத்தில் ஒரு நல்ல மனிதர் ராஷ்மிகா தாத்தாவான சச்சின் கடேகர் கதாபாத்திரங்கள் பேலன்ஸ் செய்கிறது. காஷ்மீர் பிரச்னையை இன்னும் நன்றாக கையாள வேண்டும் என்பதே நிதர்சனமான உண்மை. ஆனால், மற்ற படங்களுக்கு இந்தப் படம் எவ்வளவோ பரவாயில்லை. இருதரப்பு நியாயங்களை பேச முற்பட்டுள்ளனர்.

நடிகர்கள் அட்டகாசம்:

படத்தின் மிகப்பெரிய பலமே நடிகர் தேர்வுதான். ஹீரோ, ஹீரோயின் முதல் துணை கதாபாத்திரங்கள் வரை எல்லா கதாபாத்திரங்களின் தேர்வு சூப்பர். தொடக்கத்தில் பொம்மை ஹீரோயினாகவே இருப்பாரோ என நினைக்க தோன்றினாலும் படம் செல்ல செல்ல தன்னுடைய நினைப்பால் மிரள வைக்கிறாள் மிருணாள் தாக்கூர். தொடக்கத்தில் சாக்லேட் பாயாக வரும் போதும், உருகி உருகி காதலிக்கும் போதும், பாகிஸ்தான் சிறையில் கைதியாக வாடும் போதும் துல்கர் சல்மான் நடிப்பில் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளார். படத்தில் பிரகாஷ் ராஜ், கௌதம் மேனன் போன்ற மிக முக்கியமான நடிகர்கள் இருந்தாலும் கதையின் ஓட்டத்தில் தேவையான சில காட்சிகளில் மட்டுமே வருகிறார்கள். தேவையில்லாமல் அவர்களை ஒரு காட்சியில் கூட பயன்படுத்தவில்லை. அப்படித்தான் மற்ற துணை நடிகர்களும். டிக்கெட் செக்கராக வரும் சுனில், பாலாஜியாக தருண் பாஸ்கர், நாடக நண்பர் வெண்ணிலா கிஷோர் என அனைவருமே இயல்பான நடிப்பை வெளிப்படுத்துகின்றனர். நகைச்சுவை அவ்வளவு சூப்பராக வொர்க் அவுட் ஆகியிருக்கிறது.

கிளாசிக் படமாக மாற வேண்டியது.. ஆனால்!

ஒட்டுமொத்தமாக படம் பீல் குட் ஆகத்தான் இருக்கிறது. ஆனால், இன்னும் கொஞ்சம் காட்சிகளை சுருக்கி அழுத்தமான காட்சிகளை கூட்டியிருந்தால் காலத்தை வென்ற க்ளாசிக் படமாக மாறியிருக்கும். ஆனாலும், இலக்கிய உணர்வுகளை கொடுக்கும் படம் என்பதில் சந்தேகமில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com