“அவருக்கு நான் எப்போதுமே ‘சிஸ்’தான்”-எஸ்.பி.பி குறித்து நினைவுகளை பகிரும் உஷா உதுப்

“அவருக்கு நான் எப்போதுமே ‘சிஸ்’தான்”-எஸ்.பி.பி குறித்து நினைவுகளை பகிரும் உஷா உதுப்

“அவருக்கு நான் எப்போதுமே ‘சிஸ்’தான்”-எஸ்.பி.பி குறித்து நினைவுகளை பகிரும் உஷா உதுப்
Published on

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தனது தனித்துவமான குரலாலும், தன்னடக்கத்தாலும் பலரையும் கவர்ந்தவர். அவருடைய மறைவை பலராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. குறிப்பாக திரையுலகினர் பலரும் தங்களுடைய இரங்கல்களையும் வருத்தங்களையும் தெரிவித்து வருகின்றனர். அவருடன் பல மேடைகளைப் பகிர்ந்த பிரபல பாடகி உஷா உதுப், எஸ்.பி.பியுடனான தனது மறக்கமுடியாத அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

எஸ்பிபி சாருடன் முதன்முதலாக சேர்ந்துபாடிய தருணம் எப்போது?

நானும் எஸ்பிபி சாரும் முதன்முதலாக 1976ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஊருக்கு உழைப்பவன்’ திரைப்படத்தில்தான் டூயெட் பாடல் ஒன்றை சேர்ந்து பாடினோம். அதற்குப்பிறகு பல நிகழ்ச்சிகளில், குறிப்பாக இசைஞானி இளையராஜாவின் கான்செர்ட்டுகளில் ஒன்றாக பங்கெடுத்து இருக்கிறோம். அவருக்கு என்னுடைய மியூசிக் ஸ்டைல் மிகவும் பிடிக்கும். அதேபோல் இசையின்மீதான அவருடைய அணுமுகுறை பார்ப்பவர்களுக்கு ஆச்சர்யமாக இருக்கும்.

எஸ்பிபி சாருடன் மறக்கமுடியாத அனுபவங்கள் பற்றிக் கூறுங்கள்

அடிக்கடி மேடை நிகழ்ச்சிகளில் ஒன்றாக பங்கேற்போம். என்னுடைய நல்ல நண்பர். அதைவிட எனக்கு ஒரு சிறந்த மூத்த சகோதரர். என்னை அன்போடு ’சிஸ்’ என அழைப்பார். இரண்டு விஷயங்களை என்னால் வாழ்நாளிலும் மறக்கமுடியாது.

2006இல் சுனாமி வந்தபோது, சுனாமி அச்சத்தைப் போக்கி, தைரியத்தை வரவழைக்கும் ஒரு தமிழ் பாடல் பதிவு செய்யவேண்டும் என அவரை அழைத்துக் கேட்டேன். எந்த மறுப்பும் தெரிவிக்காமல் ஓகே எனக்கூறினார். நான் பொதுவாக இந்தி மற்றும் பெங்காளியில்தான் எழுதுவேன். எனவே அப்போது கவிஞர் வைரமுத்து எனக்காக தமிழில் வரிகள் எழுதிக்கொடுத்தார். (https://www.youtube.com/watch?v=iU3NLHJsDHw&feature=youtu.be) அந்த நேரத்தில், சித்ரா, உன்னி மேனன், ஸ்ரீநிவாஸ் உட்பட அனைத்துப் பாடகர்களையும் என்னுடன் இணைந்து பாடச்சொல்லிக் கேட்டேன். அனைவரும் ஒத்துழைப்புக் கொடுத்தனர். குறிப்பாக எஸ்பிபி அண்ணா எந்த மறுப்பும் தெரிவிக்காமல் ஓகே சொன்னது மறக்கமுடியாது.

மற்றொருமுறை, எனது மகனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே கொச்சின் மருத்துவமனையில் அனுமதித்திருந்தோம். அங்கு கிட்னி மாற்று அறுவைசிகிச்சை நடந்தது. அப்போது நான் எஸ்பிபி அண்ணாவை அழைத்து, நாம் சந்திக்கலாமா எனக் கேட்டேன். அவரும் உடனே சரி எனக்கூறினார். அதேசமயம் என்னால் வரமுடியாது என நிலைமையை எடுத்துக்கூறினேன். உடனே அவரே வந்து என்னை பார்க்கிறேன் எனக்கூறினார். அதேபோல் மருத்துவமனைக்கு வந்து என் மகனை பார்த்தபிறகு என்னுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார். பின்னர் எனது மகள் அஞ்சலியைப் பார்த்து, ‘அஞ்சலி அஞ்சலி’ பாடலைப் பாடினார். அந்த சமயம் அனைவரும் அவரைப் பார்த்து வியந்தனர். தான் இருக்கும் இடத்தை கலகலப்பாக வைத்துக்கொள்ளும் அவர் ஒரு அற்புதமான, சிறந்த மனிதர்.

அவரிடம் தங்களை வியக்கவைத்த குணாதிசயம் என்ன?

தான் எப்போதும் பெரிய பாடகர் என்ற எண்ணம், கர்வம் அவருக்கு இருந்தது கிடையாது. எப்போதும் தாழ்மையாக நடந்துகொள்வார். மற்றவர்களை ஏற்றுக்கொள்வதில் எந்த தயக்கமும் காட்டமாட்டார். மற்றவர்களுடைய திறமைகளை பாராட்டும் சிறந்த குணம் கொண்டவர்.

மேடைகளில் பாடும்போது மற்றவர்களை கவர்ந்திழுக்கும் அவரது பாடும் ஸ்டைலை பார்த்து வியந்திருக்கிறேன். மேலும் தன்னுடன் பாடுபவர்களை சௌகர்யமாக உணரவைப்பார். பணிவு நிறைந்தவர். ஈகோ என்பது துளியும் கிடையாது.

அவ்வளவு உயர்ந்த மனிதர் வெகுசீக்கிரத்தில் நம்மைவிட்டு போய்விட்டதை இப்போதும் என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com