சுவர்ணலதா
சுவர்ணலதாweb

சுவர்ணலதா பிறந்தநாள்| எதிர்பார்த்து தேசியவிருது கிடைக்காத பாடல்.. 14 வயதில் நிகழ்ந்த அதிசயம்!

தித்திக்கும் குரலுக்கு சொந்தக்காரரான சுவர்ணலதா அவர்களின் பிறந்தநாள் பகிர்வு..
Published on

ஸ்வர்ணலதா... மனதிற்குள் நுழைந்து இதயத்தை திருடிச்செல்லும் மாயக்குரல்.  'குயில் பாட்டு'... 'மாலையில் யாரோ', 'ஆட்டமா தேரோட்டமா', 'முக்காலா', 'போறாளே பொன்னுத்தாயி', 'மெல்லிசையே',  'என்னுள்ளே என்னுள்ளே'...என நம்முள்ளே அற்புதங்களை நிகழ்த்திய உன்னதக்குரல். அவர் பாடிய ஒவ்வொரு பாடலுமே நம்முள்ளே பல மாற்றங்களை நிகழ்த்திவிடும். இரும்பு இதயத்தைக்கூட கரும்பு இதயமாக்கி பிழிந்துவிடும் இனிப்பு குரல் அது. நாடி, நரம்பு, ரத்தம், சதை என ஊடுருவியவர். பாடுவதற்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்ட ஸ்வர்ணலதா மறைந்து 16 ஆண்டுகள் ஆனாலும் இன்னும் அவரது பிறந்தநாளை மறக்காமல் கொண்டாடுகிறார்கள் அவரது ரசிகர்கள். மென்மையான குரலால் நம்மை உயிர்ப்பித்துக்கொண்டே இருக்கும் பாடகி ஸ்வர்ணலதாவின் பிறந்தநாள் இன்று! அவரைப் பற்றிய சிறப்பு தொகுப்பு இது....

சிறுவயது சுவர்ணலதா

பூர்வீகம் கேரளாவின் பாலக்காடு மாவட்டம். மிகப்பெரிய காஃபி ஏஜென்ஸி வைத்திருந்த செல்வந்தரின் குடும்பத்தில் பிறந்த ஸ்வர்ணலதா,  படித்தது, வளர்ந்தது எல்லாம் பெங்களூருதான். தொழில் நிமித்தமாகத்தான் அவரது குடும்பம் பெங்களூர் குடிபெயர்ந்தது. பாலக்காடு தமிழக எல்லையில் இருப்பதால், ஸ்வர்ணல்தாவின் வீட்டில் பெரும்பாலும் தமிழ் பாடல்கள்தான் ஒலிக்கும். அப்படித்தான், தந்தை வழியாக ஸ்வர்ணலதாவுக்கு தமிழும் தமிழ் பாடல்களும் அறிமுகம். பின்னாளில் தமிழ்நாடே காலத்திற்கும் தன் குரலை கேட்டுக்கொண்டிருக்கும் என்பதை அவரே எதிர்பார்த்திருக்கமட்டார். ஆனால், காலமும் திறமையும் அதனை நிகழ்த்திக்காட்டியது. ஏனென்றால், குழந்தைப் பருவத்திலிருந்தே ஸ்வர்ணல்தாவுக்கு பிடித்த விஷயம் பாடல்கள் பாடுவது மட்டும்தான்.

சுவர்ணலதா
சுவர்ணலதா

விளையாடும்போது, கீழே விழுந்து அடிபட்டு அழுதுக்கொண்டிருந்தால் ‘இப்படியே அழுதுக்கிட்டிருந்தீன்னா தொண்டை கட்டிக்கும், அப்புறம் பாட முடியாது’ என்று அவரது அம்மா சொன்னால், அப்படியே அழுகையை நிறுத்திவிடுவாராம் ஸ்வர்ணலதா!  பாடுவதற்கே சிறுவயதிலேயே தன்னை அர்ப்பணித்திருக்கிறது அந்தக் குரல்.  சிறு வயதிலேயே பாட ஆரம்பித்த ஸ்வர்ணலதாவுக்கு, பெரிய பாடகி ஆகவேண்டும் என்பது ஸ்வர்ணலதாவின் கனவாகிப்போனது. நிறைய கன்னட மேடைகளில் பாடி பரிசுகளையும் வென்றுள்ளார். அனைவரும் பாராட்டவே, அவரை அழைத்துக்கொண்டு சென்னைக்கு வாய்ப்புத்தேடி வந்தது அவரது குடும்பம். ஆனால், நினைத்த படி வாய்ப்பு எளிதாக கிடைக்கவில்லை.

சுவர்ணலதா
சுவர்ணலதா

தான் பாடிய எல்லா கேசட்டுகளையும் இசை அமைப்பாளர்களின் அலுவலகங்களுக்கு தனது அண்ணனுடன் சென்று, கொடுத்து வாய்ப்பு கேட்டுவிட்டு வந்திருக்கிறார்.  நீண்ட தேடலுக்குப் பிறகு  பாடுவதற்கான வாய்ப்பு வந்துள்ளது. அவரின் அந்த நீடியப் பொறுமைதான்,  தமிழ்நாட்டிற்கு, காலத்திற்கும் மறக்க முடியாத பாடகியைக் கொடுத்தது.

14 வயதில் கிடைத்த வாய்ப்பு..

எம்.எஸ்.வியிடம் வாய்ப்பு கேட்டு சென்றபோது, சுசிலா பாடிய பால் போலவே பாட்டை அப்படியே பாடி காண்பித்திருக்கிறார். அது, பிடித்து போகவே ஒரு வாரத்திலேயே பாடகியாக எம்.எஸ்.வி. அறிமுகப்படுத்தியுள்ளார்.  நீதிக்கு தண்டனை படத்தில் வரும்  ‘சின்னஞ்சிறு கிளியே...’ பாடல்தான் ஸ்வர்ணலதாவின் முதல் பாடல். அந்தப்பாடல் பாடும்போது அவருக்கு வயது 14. ஆனால், ஸ்வர்ணலதா பாடகி ஆவதற்கு முன்பே அவரது தந்தை இறந்துவிட்டார். சினிமாவில் தனது முதல் சம்பளத்தை தனது அம்மாவிடம் கொடுத்து ஆசீர்வாதம் வாங்கியிருக்கிறார்.

சுவர்ணலதா
சுவர்ணலதா

எம்.எஸ்.வி இசையில் அறிமுகமாகியிருந்தாலும் ஸ்வர்ணலதா அதிகமாக பாடியது, இளையராஜாவின் இசையில்தான். என்னுள்ளே என்னுள்ளே..., போவோமா ஊர்கோலம்..., நீ எங்கே என் அன்பே..., மாசிமாசம் ஆளான பொண்ணு...,என்னை தொட்டு அள்ளிக்கொண்ட..., அடி ராக்கம்மா கையை தட்டு..., சொல்லிவிடு வெள்ளி நிலவே..., என அவர் பாடிய அனைத்து பாடல்களுமே மிகப்பெரிய ஹிட்.

எதிர்பார்த்த பாடலுக்கு கிடைக்காத தேசிய விருது..

அதேபோல், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தேசிய விருது வென்ற முதல் பாடகி என்ற பெருமை ஸ்வர்ணலதாவையே சாரும். போறாளே பொண்ணுத் தாயி பாடலுக்காக தேசிய விருதை வென்றார். ஆனால்,  ஸ்வர்ணலதா தேசிய விருதை ரொம்பவே எதிர்பார்த்த பாடல் என்றால், ‘மாலையில் யாரோ...’ பாட்டுதான். ஆயிரக்கணக்கான பாடல் பாடியிருந்தாலும் அவரது ஃபேவரைட் பாடல் என்றால்  ‘மாலையில் யாரோ..’ பாடல்தான்.   அவர் விரும்பிய பாடல்களுக்கு தேசிய விருது கிடைக்கவில்லை என்றாலும் அவர் பாடிய பாடல்கள் எல்லாமே ரசிகர்களால் விருது கொடுக்கும் அளவுக்கு கொண்டாடப்படும் பாடல்கள்தான். அவர் மறைந்தாலும் அவரது பாடல்கள் ரசிகர்களின் இதயத்தில் நுழைந்து, உயிர்ப்பித்துக்கொண்டேதான் இருக்கும்... விஷ் யூ ஹேப்பி பர்த்டே ஸ்வர்ணா மேம்!

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com