என்ஜாயி எஞ்சாமியின் இசை யாருடையது? Dhee கொடுத்த புது விளக்கம்! முடிவுக்கு வருமா சர்ச்சை?

என்ஜாயி எஞ்சாமியின் இசை யாருடையது? Dhee கொடுத்த புது விளக்கம்! முடிவுக்கு வருமா சர்ச்சை?
என்ஜாயி எஞ்சாமியின் இசை யாருடையது? Dhee கொடுத்த புது விளக்கம்! முடிவுக்கு வருமா சர்ச்சை?

யூட்யூபில் சுமார் 43 கோடி பார்வையாளர்களை கடந்து உலகளவில் பிரபலமடைந்துள்ளது என்ஜாயி எஞ்சாமி பாடல். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தயாரிப்பில், பாடகர்கள் தெருக்குரல் அறிவு மற்றும் Dhee பாடி பெர்ஃபார்ம் செய்த இப்பாடலை, சமீபத்தில் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் பெர்ஃபார்ம் செய்திருந்தார்கள். உலகளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற அப்பாடலை, செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி முன் பாடகிகள் தீ மற்றும் மாரியம்மாள் ஆகியோர் பாடியிருந்தனர். இந்நிகழ்வில் இந்தப்பாடலை எழுதி, அதில் நடித்திருந்த தெருக்குரல் அறிவு இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. `ஏன் அறிவு இடம்பெறவில்லை’ `அறிவு ஓரங்கட்டப்படுகிறாரா?’ என்பது உள்ளிட்டு பல தரப்பிலிருந்தும் கேள்வி எழுப்பப்பட்டது.

தன் மீது தொடர் கேள்விகள் முன்வைக்கப்பட்ட நிலையில், அதுதொடர்பாக நேற்றைய தினம் விளக்கம் அளித்தார் அறிவு. அவரைத்தொடர்ந்து சந்தோஷ் நாரயாணன், பாடகி தீ ஆகியோரும் தங்கள் தரப்பு விளக்கத்தை கொடுத்திருக்கிறனர். மூவருமே, இப்பாடலை இசையமைத்தது யார் என்பது குறித்து ஒவ்வொரு தகவலை நீண்ட விளக்கமாக கொடுத்திருக்கின்றனர்.

இந்த சலசலப்பு தொடர்பாக முதலாவதாக விளக்கம் கொடுத்தவர், பாடகர் அறிவு. அவர் தனது விளக்கத்தில், `என்ஜாயி எஞ்சாமி பாடலை நானே இசையமைத்து, எழுதி, பாடி, நடித்திருந்தேன். யாரும் எனக்கு ஒரு டியூனையோ, மெலடியையோ அல்லது ஒரு வார்த்தையோ எழுதி கொடுக்கவில்லை. கிட்டத்தட்ட 6 மாதங்கள் தூக்கமில்லாமல், மன அழுத்தம் நிறைந்த இரவுகளையும் பகலையும் இந்த பாடலுக்காக செலவழித்து உழைத்துள்ளேன். இது அனைவரும் சேர்ந்து செய்த கூட்டு முயற்சிதான், அதில் சந்தேகமில்லை. நீங்கள் உறங்கும் போது உங்கள் பொக்கிஷத்தை யார் வேண்டுமானாலும் அபகரிக்கலாம். நீங்கள் விழித்திருக்கும் போது ஒருபோதும் உங்களிடம் இருப்பதை யாராலும் பறித்துவிட முடியாது. உண்மை எப்போதும் வெல்லும்’ என பதிவிட்டிருந்தார்.

அவரைத்தொடர்ந்து நேற்று இரவு சந்தோஷ் நாராயணன் விளக்கமொன்று கொடுத்தார். அதில், `நமது வரலாற்றையும் இயற்கையும் கொண்டாடும் விதமாக தமிழில் ஒரு பாடலை உருவாக்கும் யோசனையொன்றை, கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பரில் என்னிடம் பாடகி தீ சொன்னார். அதன் பிறகு நான் இசையமைத்து, பதிவுசெய்து, தீ மற்றும் அறிவுடன் என்ஜாயி எஞ்சாமி பாடலை இணைந்துப் பாடினேன். மேலே கூறப்பட்ட என்னுடைய பணியானது உலகளவில் தயாரிப்பாளர் என்று குறிப்பிடப்படுகிறது.

உலக அளவில் தனிப் பாடல்களை உருவாக்குபவர்கள் அப்படித்தான் குறிப்பிடுவார்கள் என்பதை இந்தத் துறை சார்ந்த பலரும் ஏற்கெனவே அறிவர். நான், தீ மற்றும் அறிவு ஆகிய மூன்று பேரும் ஒருவொருக்கொருவர் கொண்டுள்ள அன்பிற்காகவும், தனிப்பாடல்கள் மேல் எங்களுக்கு உள்ள காதலாலும் இந்தப்பாடலுக்கு ஒன்றாக இணைந்தோம். இந்தப் பாடலில், நாங்கள் மூவருமே எங்களது பங்களிப்பை மேற்கொள்ள வேண்டும் முடிவுசெய்து ஒத்துக்கொண்டோம்.

தீ மற்றும் அறிவு பாடலைப் பாட ஒப்புக்கொண்டனர். இருவரும் சேர்ந்து பாடலுக்காகவும் பணியாற்றினர். தீயின் பல வரிகளுக்கு அவரே இசையமைத்தார். அறிவு பாடல் வரிகள் எழுத ஒப்புக்கொண்டார். நான் மீதி இசையையும், அறிவு பகுதிக்கான ட்யூனையும் கம்போஸ் செய்தேன். இந்தப்பாடலின் வருமானம் மற்றும் உரிமை அனைத்தும் தீ, அறிவு மற்றும் நான் ஆகிய 3 பேரும் சமமாகப் பகிர்ந்துள்ளோம் என்பதில் நான் வெளிப்படையாக இருக்க விரும்புகிறேன்’ என்று கூறியிருந்தார்.

இவரைத்தொடர்ந்து தற்போது பாடகி தீயும் இதுகுறித்து பேசியுள்ளார். தீ தனது சமீபத்திய பதிவில், `என்ஜாயி எஞ்சாமி பாடலுக்கான வருமானம் மற்றும் அதன் உரிமையை நான், சந்தோஷ் நாராயணன், அறிவு ஆகியோர் அனைவரும் சமமாகவே பகிர்ந்துள்ளோம். அதேபோல இப்பாடலின் வரிகளுக்காகவும், பாடல் சொல்லவரும் கருத்துக்காகவும் குழுவின் அனைவருமே இணைந்து பணியாற்றினோம். என்னை பொறுத்தவரை என்ஜாயி எஞ்சாமி பாடலின் ஒவ்வொரு கட்டத்திலும் அறிவு மற்றும் சந்தோஷ் நாராயணன் இருவருக்கும் உரிய அங்கீகாரம் வழங்கியுள்ளேன். ஒவ்வொரு முறையும் எனக்கு கிடைத்த வாய்ப்புகளில் அவர்கள் இருவரையும் குறிப்பாக அறிவு குறித்து பெருமையுடனே பேசியுள்ளேன். இவர்கள் இருவரின் முக்கியத்துவத்தை எந்தக் கட்டத்திலும் நான் குறைத்து மதிப்பிட்டது கிடையாது.

இந்தப் பாடலுக்கான வரவேற்பு கிடைக்கும்போதெல்லாம், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், மேடையிலும் இருவரின் பங்களிப்பை முன்னிலைப்படுத்துவதை செய்துவருகிறேன். அதிலும் குறிப்பாக பாடகர் அறிவுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவேண்டும் - அவருடைய குரல் அதிகம் வெளியே தெரிய வேண்டும் என்றே நான் நினைத்திருக்கிறேன். உண்மையில் அவருடைய கருத்துகளே முதன்மைப் பெறவேண்டும் என்றே நான் சொல்வேன். இப்பாடலுக்கு கிடைக்கும் ஒவ்வொரு புகழும், உச்சமும் அறிவு மற்றும் சந்தோஷ் நாராயணனுக்கு கிடைக்க வேண்டும் என்பதே என் எண்ணம். அந்தப் புகழ் தவறாகவோ, நியாயமற்றதாகவோ அல்லது சமத்துவமின்மையுடனோ பகிரப்பட்டால், நான் அதற்கு ஆதரவாக இருக்க மாட்டேன்” என்றுள்ளார்.

இத்துடன் கடந்த ஆண்டு வெளியான ரோலிங் ஸ்டோன் இந்தியா இதழின் அட்டைப்படத்தில் பாடகர் அறிவு இடம்பெறாதது - தீ மட்டும் இடம்பெற்றது குறித்த விளக்கத்தையும் தனது நீண்ட விளத்தில் கொடுத்திருக்கிறார் தீ. அதில் அவர், `நானும், பாடகர் ஷானும் அந்த இதழின் அட்டைப்படத்தில் இடம் பெற்றிருந்தோம். அதற்கு காரணம், அப்போது நாங்கள் இருவரும் ஒரு ஆல்பத்துக்காக இணைந்த பணியாற்றி இருந்தோம். அதன் அட்டைப்படமே அது. மற்றபடி, அது என்ஜாயி எஞ்சாமி பாடலுக்கானதோ அல்லது நீயே ஒளி பாடலுக்கானதோ அல்ல.

இதையொட்டியே, அந்த அட்டைப்படத்தில் என்ஜாயி எஞ்சாமி பாடல் குறித்தோ நீயே ஒளி பாடல் குறித்தோ குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் என்ஜாயி எஞ்சாமி பாடலுக்கான வரவேற்பாக பாடகர் அறிவு, சந்தோஷ் நாராயணன் மற்றும் majja கலைஞர்கள் பற்றிய கட்டுரைகளை ரோலிங்ஸ்டோன் வெளியிட இருக்கிறது என எனக்கு தெரிவிக்கப்பட்டது. அதனாலேயே தனியாக வேறொரு பேட்டியை கொடுத்திருந்தோம்’ என்றுள்ளார்.

இப்படியாக மூவரும் வெவ்வேறு கருத்துகளை தங்கள் பதிவில் தெரிவித்திருக்கின்றனர். இவர்கள் மூவர் கருத்தில் அறிவு, என்ஜாயி எஞ்சாமி பாடலுக்கு இசையமைத்தது தானே என்றும், சந்தோஷ் நாராயணன் மற்றும் பாடகி தீ, இசையமைப்பில் சந்தோஷ் நாராயணனுக்கு பங்குள்ளது என்றும் மிகத் தெளிவுடன் குறிப்பிட்டுள்ளனர்.

இவற்றுடன் சந்தோஷ் மற்றும் தீ, தற்போது நடந்து கொண்டிருக்கும் விவாதம் குறித்து தாங்கள் எங்கும் விவாதிக்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் இருவருமே `இந்தப் பாடலில் ஈடுபட்டுள்ள எவருடனும் பொது அல்லது தனிப்பட்ட விவாதத்திற்கு நாங்கள் முற்றிலும் தயாராக இருக்கிறேன். எங்கள் குறிக்கோள், கலைகளை உருவாக்கி மக்களை ஒன்றிணைக்க வேண்டும் என்பதே’ என்று அழுத்தமாக கூறியுள்ளனர். செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் பாடகர் அறிவு இடம்பெறாதது குறித்த விளக்கத்தையும் சந்தோஷ் மற்றும் தீ விளக்கியுள்ளனர். அதன்படி, அறிவு அமெரிக்கா சென்றதே அவர் அந்நிகழ்ச்சியில் பங்கேற்காமைக்கு காரணம் என இருவருமே அழுத்தமாக தெரிவித்துள்ளனர்.

இனியாவது இப்பிரச்னை ஒரு முடிவுக்கு வருமென எதிர்ப்பார்க்கலாம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com