கீர்த்தி சுரேஷை பாராட்டிய ‘அபூர்வ சகோதரர்கள்’ இயக்குநர்
பழம்பெரும் நடிகை சாவித்திரியாக நடித்துள்ள கீர்த்தி சுரேஷை இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் தனது ஃபேஸ்புக்கில் பாராட்டியுள்ளார்.
இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. தமிழில் சிறந்தப் படங்களை தந்தவர். ‘அபூர்வசகோதரர்கள்’ ஒரு படம் போதும் இவரின் புகழை பரப்ப. அடுத்து ‘ராஜ பார்வை’, ‘மைக்கேல் மதன காமராசன்’ காமெடி கலந்த த்ரில்லர் படங்களை தந்தவர். இவர் சமீபத்தில் வெளியான கீர்த்தி சுரேஷின் ‘நடிகையர் திலகம்’ படம் குறித்து தனது அபிப்ராயத்தை ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அந்த பதிவில், சாவித்திரி கெட் அப்பில் உள்ள கீர்த்தி சுரேஷூடனான புகைப்படத்தையும் பகிர்ந்து கொண்டார். அதில், “நீங்கள் சாவித்ரியுடன் புகைப்படம் எடுத்திருக்கிறீர்களா என பலரும் கேட்டிருக்கிறார்கள். அப்போது இல்லை. ஆனால், இப்போது எடுத்துவிட்டேன்” என்று குறிப்பிட்டு கீர்த்தியை புகழ்ந்துள்ளார்.
சாவித்திரியின் திரைப்பயணத்தில் முக்கியமான பலர் பற்றி ‘நடிகையர் திலகம்’ படத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் ஒருவர் இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ்.