சுசீந்திரன் பட ஷூட்டிங் கேப்பில் கோயில்களுக்குச் சென்று வழிபடும் சிம்பு !
சுசீந்திரனின் ‘ஈஸ்வரன்’ பட ஷூட்டிங்கில் திண்டுக்கல்லில் இருக்கும் சிம்பு அங்குள்ள கோட்டை மாரியம்மன் கோயிலுக்குச் சென்று வழிபட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளன.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ’மாநாடு’ அரசியல் கதைக்களம் கொண்டது என்பதால் அதிக கூட்டத்தைக் கூட்டி காட்சியமைப்புகளை எடுக்கவேண்டும். இதற்கு தாமதமாகும் என்பதால் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அடுத்த மாதம் படப்பிடிப்பை தள்ளிப்போட்டிருக்கிறார்.
இந்தக் குறிப்பிட்ட கால இடைவெளியை உபயோகமாக மாற்ற நினைத்த சிம்பு இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் ’ஈஸ்வரன்’ படத்தில் நடித்து வருகிறார். கிராமப்புற கதைக்களம் கொண்ட, இப்படம் திண்டுக்கல்லில் 35 நாட்கள் படமாக்கப்படவுள்ளது. கோயில், சிலம்பாட்டம் படத்திற்குப் பின் சிம்பு நடிக்கும் கிராமப்புற கதைக்களம் இது. சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார். தமன் இசையமைக்கிறார்.
இந்நிலையில் சிம்பு மதுரையில் இருந்தபடி திண்டுக்கல்லில் நடைபெறும் ஷூட்டிங்கில் கலந்துகொண்டு வருகிறார். ஏற்கனவே, படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பு சிம்பு மதுரை மீனாட்சியம்மன் கோயில் சென்று வழிப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில், சிம்பு திண்டுக்கல்லில் உள்ள புகழ் பெற்ற கோட்டை மாரியம்மன் கோயிலுக்குச் சென்று வழிபட்டு வந்துள்ளார். இளைத்த உடலுடன் ‘கோவில்’ படத்தில் பார்த்த சிம்பு போலவே காட்சியளிக்கும் சிம்புவின் இந்தப் புகைப்படத்தை அவரது ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு உடையவாரான சிம்பு ஏற்கனவே, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மாலை போட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

