சிம்பு - ஹன்சிகா நடித்த ‘மஹா’ - மே மாதம் வெளியீடு?
ஹன்சிகாவுடன் இணைந்து சிம்பு நடித்திருந்த ‘மஹா’ திரைப்படம் வரும் மே மாதம் வெளியாகலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமா வட்டாரத்தில் சிம்பு மற்றும் ஹன்சிகா இடையேயான காதல் விவகாரம் அதிகம் பேசப்பட்ட ஒன்று. இவர்கள் இடையே இருந்து வந்த காதல் சில ஆண்டுகளுக்கு முன் பிரேக் அப் ஆனது. அதன் பிறகு இருவரும் ஒருவர் குறித்து மற்றொருவர் பேசுவதையே தவிர்த்து வந்தனர். இவர்களின் காதல் பேசப்பட்டு வந்த காலத்தில் இவர்கள் இருவரும் இணைந்து ‘மஹா’ படத்தில் நடித்திருந்தனர்.
இப்படத்தில் சிம்பு ஒரு பைலட் ஆக நடித்திருந்தார். கோவாவை மையமாக கொண்டு, நிஜ பைலட் ஒருவரின் கதையை பின்புலமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் சிம்பு கெஸ்ட் ரோல் செய்திருந்தார். அவரது காட்சிகள் சிறப்பாக வர மேலும் கொஞ்சம் நேரம் அந்தப் பாத்திரத்தின் நீளத்தை நீடித்து உள்ளதாக இயக்குநர் யுஆர் ஜமீல் கூறி இருந்தார். இவர் ஹன்சிகாவின் நடிப்பில், லக்ஷ்மண் இயக்கத்தில் வெளியான ‘ரோமியோ ஜூலியட்’ மற்றும் ‘போகன்’ போன்ற படங்களில் பணியாற்றியவர். அந்த அறிமுகத்தை வைத்தே அவர் ‘மஹா’ படத்தின் கதையை ஹன்சிகாவிடம் கூறியிருந்தார். ‘மஹா’வில் ஸ்ரீகாந்த், தம்பிராமையா, கருணாகரன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இது இவருக்கு 25 ஆவது படம்.
இந்நிலையில், திடீரென்று புத்தாண்டு கொண்டாட்டத்தின் பரிசாக ‘மஹா’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியானது. அதில் பைலட் தோற்றத்தில் சிம்பு தோன்றி இருந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு காதல் முறிவால் விலகிய இந்த ஜோடி நடித்துள்ள படம் என்பதால், அது பலரது கவனத்தை உடனடியாக ஈர்த்தது. இப்போது இப்படம் குறித்த மேலும் சில தகவல்கள் கிடைத்துள்ளன. வரும் மே மாதம் படத்தை வெளியிடுவது தொடர்பாக படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இது அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இதற்கு முன் ஓவியாவின் ‘90எம்எல்’ படத்திற்குப் பிறகு சிம்புவின் படம் எதுவும் வெளியாகவில்லை. இந்தப் படத்தில்கூட அவர் கெஸ்ட் ரோல் மட்டுமே செய்திருந்தார். அதனை அடுத்து அவரது ‘மாநாடு’ திரைப்படமும் சில சிக்கல்களால் தடைப்பட்டன. வெகு காலமாக படங்களே வெளியாகமால் இருந்ததால் சிம்பு ரசிகர்கள் சோர்வில் இருந்தனர். அவர்களுக்கு ஹன்சிகா- சிம்பு கூட்டணியில் ‘மஹா’ வெளியாக இருக்கும் செய்தி மகிழ்ச்சியை அளித்துள்ளது.
‘மஹா’ ஹன்சிகாவின் 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.