என்னை ஆன்டி இந்து என்கிறார்கள்- ‘ஷ்யாம் சிங்கா ராய்’ இயக்குநர் ராகுல் சங்க்ரித்யன் பேட்டி

என்னை ஆன்டி இந்து என்கிறார்கள்- ‘ஷ்யாம் சிங்கா ராய்’ இயக்குநர் ராகுல் சங்க்ரித்யன் பேட்டி
என்னை ஆன்டி இந்து என்கிறார்கள்- ‘ஷ்யாம் சிங்கா ராய்’ இயக்குநர் ராகுல் சங்க்ரித்யன் பேட்டி

”‘ஷ்யாம் சிங்கா ராய்’ தெலுங்கில் கமர்ஷியல் ஹிட் அடிக்கும் என்பது தெரியும். ஆனால், தமிழகத்தில் இந்தளவுக்கு படத்தை கொண்டாடுவாங்கன்னு நான் கொஞ்சமும் எதிர்பார்க்கல. தமிழ் மக்கள் பாராட்டுறது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாவும் பிரமிப்பாவும் இருக்கு. தியேட்டர்ல ரிலீஸானதைவிட ஓடிடியில் வெளியான பிறகு படத்தை இன்னும் அதிகம் பேர் பாராட்டுகிறார்கள்” என்று உற்சாகப் பூரிப்புடன் பேசுகிறார், ’ஷ்யாம் சிங்கா ராய்’ படத்தின் இயக்குநர் ராகுல் சங்க்ரித்யன்.

ஒரு தெலுங்கு சினிமாவுக்கு, இந்தளவுக்கு நெகிழ்ச்சியான பாராட்டுகளை தமிழக மக்கள் வாரி வழங்கியதில்லை. சமூக வலைதளங்கள் மூலம் பார்வையாளர்கள் தினந்தினம் கொண்டாடித் தீர்க்கிறார்கள். இந்த நிலையில், சமூக ஒடுக்குமுறைகளை காட்டிய நிஜ ஷ்யாம் சிங்கா ராயான இயக்குநர் ராகுல் சங்க்ரித்யனைத் தொடர்புகொண்டு பேசினோம். புதிய தலைமுறை டிஜிட்டலுக்காக பிரத்யேகமாகப் பேசினார்.

’ஷ்யாம் சிங்கா ராய்’ கதை ஆந்திராவிலோ தென்னிந்திய மாநிலங்களிலோ நடைபெறுவதுபோல் காட்டியிருக்கலாமே? ஏன் மறு ஜென்மம், கொல்கத்தா பின்னணி என்றெல்லாம் சுற்றி வளைத்துள்ளீர்கள்?

”இப்படத்தை முதலில் மறுஜென்மக் காதல் கதையாக எடுக்கவேண்டும் என்பதே எனது எண்ணமாக இருந்தது. சமூகம் சார்ந்தப் படமாக உருவாக்க நினைக்கவில்லை. கொல்கத்தா கதைக்களத்தை யோசிக்கவுமில்லை. இந்த ஐடியா கதாசிரியர் சத்யதேவ் சொன்னது. அது சரியாகப்பட்டதால் படத்தின் இரண்டாம் பாதியை கொல்கத்தா பின்னணியில் உருவாக்கினோம். எனக்கும் தனிப்பட்ட முறையில் வங்கத்தின் கலை, இலக்கியம், கலாச்சாரம், மனிதர்களைப் பிடிக்கும். வங்கத்தின் மீது பெரிய மரியாதையே வைத்துள்ளேன். அதனால், வங்க நிலப்பரப்பில் ஒரு எழுத்தாளர் இருந்தால் எப்படி இருக்கும்? என்று யோசித்து கதையை மேம்படுத்தினோம். வங்கப் பின்னணி என்பதால் கம்யூனிசம் தானாகவே கதைக்குள் வந்துவிட்டது.

1970 ஆம் ஆண்டுகளில் மேற்கு வங்கத்தில்தான் கம்யூனிச செயல்பாடுகள் வீரியமா நடந்துக்கிட்டிருந்துச்சி. ஒருபக்கம் சாரு மஜீம்தார் நக்சல்பாரி இயக்கத்தை கட்டமைத்துக்கொண்டு இருந்தார். இன்னொரு பக்கம் நெருக்கடி நிலை, காங்கிரஸ் கட்சியுடன் மோதல் என கம்யூனிஸ்ட் கட்சிகளின் செயல்பாடுகள் அதிகம். இப்படி பல்வேறு காரணங்களாலும் கம்யூனிசத்தை நாங்கள் ஓரளவாவது கொண்டாட நினைத்தோம். மேலும், ’ஷ்யாம் சிங்கா ராய்’யை சமூக கருத்துள்ளப் படமாகவே பார்க்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு காதல் கதை சமூகம் சார்ந்தப் பிரச்சனைகளைப் பேசியுள்ளது என்றும் எடுத்துக்கொள்ளலாம்”.

இந்தக் கதையில் சாதிய பிரச்சனை, தேவதாசி முறை குறித்து கொண்டுவரவேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது?

“இது ஒரு பீரியட் படம். 50 ஆண்டுகளுக்கு முன்னால் நடக்கும் காதல் கதை. அந்தக் காலகட்டத்தில் இருவருக்கு காதல் நிகழும்போது சமூகத்தில் என்ன மாதிரியான பிரச்சனைகளைக் கடந்து வருவார்கள் என்பதை யோசித்தோம். ஷ்யாம் சிங்கா ராய் கதாபாத்திர வடிவமைப்பும் முக்கியமானது. அதனால், சாதிய பிரச்சனைகளையும் தேவதாசி முறையையும் கதைக்குள் கொண்டுவந்தோம். 50 ஆண்டுகள் கடந்தாலும் இன்னும் இந்தப் பிரச்சனைகள் சமூகத்தில் இருந்துகொண்டேதான் இருக்கிறது. குறிப்பாக, சாதியப் பிரச்னைகள் தினமும் நிகழத்தானே செய்கிறது?”.

தேவதாசி ஒழிப்புச் சட்டம் இயற்றியதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலம். படத்திற்காக தமிழகத்திலிருந்து தகவல்கள் எடுத்தீர்களா?

”ஆமாம். தேவதாசி முறையை தமிழ்நாடு ஒழித்திருந்தாலும் ஆந்திரா,கர்நாடகா,ஒடிசா, மேற்குவங்கம், குஜராத் என பல மாநிலங்களில் இந்தப் பிரச்னை இருந்தது. படத்திற்காக தேவதாசி முறைக் குறித்து நிறையப் படித்தேன். தேவதாசி முறை ஒழிப்புக்காக போராடிய டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி உள்ளிட்டப் பல தமிழகப் போராளிகள் குறித்தும் படித்தேன். என் நாயகன் ஷ்யாம் சிங்கா ராய் ஒரு கம்யூனிஸ்ட் பின்புலத்தைக் கொண்ட எழுத்தாளர். அதனால், அப்போது உண்மையாக வாழ்ந்த தெலுங்கு எழுத்தாளர் ஸ்ரீ ஸ்ரீ, தமிழகத்தின் பெரியார் உள்ளிட்ட சமூக சீர்த்திருத்தவாதிகளுடனும் எழுத்தாளர்களுடனும் ஷ்யாம் சிங்கா ராய் கடிதத்தொடர்பு வைத்திருப்பதாகக் காட்டினேன். அதுமட்டுமட்டுமல்ல, அம்பேத்கர் குறித்தும் நிறைய படித்ததாலேயே சாதிய பிரச்னைக் குறித்து படத்தில் அழுத்தமாகக் காட்டினோம்”.

ஆனால், தேவதாசி முறை ஒழிப்புக்காக போராடிய மூவலூர் ராமாமிர்தம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி குறித்து படத்தில் இடம்பெறவில்லை என்ற விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கிறதே?

”இந்தப் படம் நடக்குற காலக்கட்டம் ரொம்பப் பின்னாடி இருக்கு. அதனால்தான், அவர்களைப் படத்துக்குள் கொண்டுவராமல் போய்விட்டது. மற்றபடி காட்டக்கூடாது என்ற எந்த நோக்கமும் இல்லை”.

தெலுங்கு சினிமாவில் நேரடியாக சாதி குறித்துப் பேசும் படங்கள் குறைவாக இருக்கும்போது, சாதியப் பிரச்சனையைக் காட்டினால் வொர்க் அவுட் ஆகும் என்று நினைத்தீர்களா?

”படத்தில் பேசியுள்ள சாதிய பிரச்னைகள் அனைத்தும் உண்மையானது. நாம் சொல்லும் விஷயம் உண்மையாக இருந்தால் மக்கள் நிச்சயம் ஏற்றுக்கொள்வார்கள். இந்தியாவில் சாதிதான் நீண்டகாலம் இருக்கக்கூடியப் பிரச்சனை. அந்த உண்மையை பேசும்போது மக்கள் கண்டிப்பா தங்களை படத்தோட ஈஸியா கனெக்ட் பண்ணிப்பாங்க என்பதில் உறுதியா இருந்தேன். மேலும், என் அப்பா பிரசாத் ஒரு சமூக செயற்பாட்டாளர். தன்னோட இளம் வயதில் நிறைய சீர்த்திருத்த நடவடிக்கைகளைச் செய்திருக்கார்.

சாதியப் பிரச்சனைகளின்போது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக, அவர்களின் பாத்திரங்களை கிணற்றில் எடுத்து வீசியுள்ளார். அதனையும்தான், நான் கதையில் சேர்த்து மேம்படுத்தினேன். என் நாயகன் ஷ்யாம் சிங்கா ராய் இன்ஸ்பிரேஷனை என் அப்பாவிடம் இருந்துதான் எடுத்துக்கொண்டேன்”.

படத்தின் காட்சியமைப்புக்கும் வசனங்களுக்காகவும் எதிர்ப்புகள் வந்ததா?

“கண்டிப்பா. படம் தியேட்டரில் வெளியானதிலிருந்தே நிறைய எதிர்ப்புகளும் மிரட்டல்களும் வந்துகொண்டே இருக்கிறது. பலர் வெறுப்பைக் காட்டுறாங்க. குறிப்பா, பிராமண சமூகத்தினர் என்மேலக் கோவமா இருக்காங்க. ‘ஆண்டி இந்து’, நான் ஒரு கம்யூனிஸ்ட், எனக்கு கிறிஸ்தவ மிஷனரிகளிடமிருந்து பணம் வருகிறது என்றெல்லாம் விமர்சிக்கிறார்கள். என்னை திட்டுவது மட்டுமல்லாமல் என் அப்பாவையும் சேர்த்து திட்டுகிறார்கள். ஆனால், இதற்கெல்லாம் நான் முக்கியத்துவம் கொடுப்பதில்லை”.

’ஷ்யாம் சிங்கா ராய்’ வெளியான அனைத்து மொழிகளிலுமே பாராட்டுக்களைக் குவித்துக் கொண்டிருக்கிறது. பை-லிங்குவல் - பான் இந்தியா படங்களும் அதிகம் வரத் துவங்கிவிட்டன என்பதால் கேட்கிறேன். தமிழில் படம் இயக்க விருப்பம் இருக்கிறதா?

“எனக்கு தமிழ் படம் இயக்கணும்னு ரொம்பவே ஆசை. ஆனால், தமிழ் மொழியை எழுதப் படிக்கத் தெரியாது. தெரியாத மொழியில் படம் இயக்குவதற்குமுன்பு, முதலில் அந்த மொழியைக் கற்றுக்கொள்ளவேண்டும். மொழி குறித்த அறிவும் புரிதலும் இருக்கவேண்டும். அப்படி தெரியவில்லை என்றால் என்னால் நேரடியாக எடுக்க முடியாது. கதையோட கனெக்ட் ஆகிக்கவும் முடியாது. அதுதான் எனது பிரச்னை. ஆனால், நான் தமிழ் படங்களுக்கும் தமிழ் நடிகர்களுக்கும் மிகப்பெரிய ஃபேன்”.

தமிழில் உங்களுடைய ஃபேவரிட் நடிகர்கள்?

“நான் விஜய் சேதுபதி சாரோட பெரிய ஃபேன். சூர்யா சாரையும் ரொம்பப் பிடிக்கும்”.

இந்தக் கதைக்கு சாய் பல்லவியை தேர்ந்தெடுத்தது நடிப்புக்காகவா நடனத்திற்காகவா?

”இரண்டும்தான். படத்தில் தேவதாசி முறையும் வருகிறது என்பதால் நாயகிக்கு கண்டிப்பாக நமது பாரம்பரிய நடனம் தெரிந்திருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அந்தக் கதாபாத்திரத்துக்கு நடன நளிவுகளை சிறப்பா செய்யக்கூடியவங்களா சாய் பல்லவிதான் என் கண்ணுக்குத் தெரிஞ்சாங்க. பல்லவி கிரேட் டான்ஸர். அவங்களுக்கு இன்னும் முறையா பயிற்சி கொடுத்தால் எல்லா விதமான நடனத்தையும் பண்ணிடுவாங்க. நடனம் மட்டுமில்லாம நல்லா நடிக்கவும் செய்றாங்க. நடிப்புத் திறமை அவங்கக்கிட்ட கொட்டிக்கிடக்கு. அதனால், சாய் பல்லவியைத் தவிர்த்து வேற ஆப்ஷனே எனக்குத் தேவைப்படலை”.

புரட்சிகர எழுத்தாளர் ஷ்யாம் சிங்கா ராய் காதல் கவிதையும் சொல்கிறாரே? நீங்கள் கவிதை எழுதுவீங்களா?

”எனக்கு கவிதை எழுதுவதில் ஆர்வம் அதிகம். நிறைய எழுதியுள்ளேன்”.

ராகுல் சங்க்ரித்யன் உங்கள் நிஜப்பெயரா? ஏற்கனவே, புகழ்பெற்ற எழுத்தாளர் ‘ராகுல் சாங்கிருத்தியாயன்’ இருக்கிறாரே? 

“இது என் உண்மையானப் பெயர்தான். ஆனால், என் அப்பாவுக்கு எழுத்தாளர் ராகுல் சாங்கிருத்தியாயனைப் பிடிக்கும். அதனால்தான், எனக்கு இந்தப் பெயரை வைத்தார். இதனை அப்பா என்னிடம் அடிக்கடி சொல்வார். ராகுல் சாங்கிருத்தியானின் புத்தகங்களையும் அறிமுகப்படுதினார். நானும் வாசகனாகிவிட்டேன். அவர் மீது பெரிய மரியாதையே ஏற்பட்டதால் எனது பெயருக்குப் பின்னால் இருந்த சாதி குடும்பப் பெயரான தம்மினேனியையே நீக்கிவிட்டேன்”.

இப்போதும், இந்தியாவில் இட ஒதுக்கீட்டுக்காக போராடிகொண்டிருக்கிறோம். சாதிய வன்முறைகள் நிகழ்ந்துகொண்டே இருக்கிறதே. சாதி குறித்து உங்கள் பார்வை என்ன?

”முதலில் வேலையின் அடிப்படையில் சாதி இருந்தது. அது ஒருசில விஷயங்களுக்காக இருந்திருக்கலாம். ஆனால், இன்றைய சூழலில் சாதியை தொடர்வது மிகப்பெரிய தவறு. அனைவரும் சாதிப்பெயரை நீக்கிவிடவேண்டும். அனைவருக்கும் கல்வி கிடைத்தால் சாதியப் பிரச்சனைகளும் குறையும். இங்கு சாதி என்றில்லை. மதம், மொழி, இனம், மாநிலம், நாடு போன்றவற்றின் அடிப்படையிலும் மனிதர்களைப் பிரித்துப் பார்ப்பது பெரிய தவறு. இந்த வித்தியாசங்களைப் பெரிதுப்படுத்தி நமக்குள்ள பிரச்னைப் பண்ணிக்கொண்டிருக்கிறோம்”.

(இயக்குநர் ராகுல் சங்க்ரித்யன்)

உங்களோட ரோல் மாடல்?

“என்னுடைய இன்ஸ்பிரேஷன், ரோல்மாடல் எல்லாமே எழுத்தாளர் ஸ்ரீ ஸ்ரீதான். அவரை அறிமுகப்படுத்திய என் அப்பாவுக்குத்தான் நான் நன்றி சொல்வேன்”.

பயோபிக் எடுக்க திட்டம் இருக்கிறதா?

“இருக்கு. ஆனால், இதுவரை யாரும் தொடாத போராளிகள் பற்றி நான் பேசணும்னு நினைக்கிறேன்”.

உங்கள் அடுத்தப்படம்?

“டைம் ட்ராவலை மையப்படுத்தி உருவாக்கவுள்ளேன். என் படங்களில் அதிகமாக மனித மனங்களும் உணர்வுகள் குறித்தும்தான் பேசியிருக்கிறேன். அதேபோல, ‘ஷ்யாம் சிங்கா ராய்’ மாதிரி சமூகத்தில் அதிக விழிப்புணர்வு கொண்டப் படங்களும் பண்ணனும்னு நினைக்கிறேன். நாம ஏன் பிறந்தோம், நாம ஏன் வாழுறோம், ஏன் இறக்கிறோம்னு இன்னும் மக்கள் குறித்து ஆழமாக சிந்தித்துப் படம் பண்ணனும்னு நினைக்கிறேன்”.

-வினி சர்பனா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com