கண்டனம் தெரிவித்த ரசிகர்கள்... விளக்கம் கொடுத்த ஸ்ருதிஹாசன்..!
‘தென்னிந்திய மொழி படங்களில் நான் ஒரு பாகமாக இருப்பதை என் இதயத்தின் ஒரு பகுதியாக கருதுகிறேன்’ என்று நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.
உலக நாயகன் கமல்ஹாசனின் மகளாக இருந்தாலும் பாடகி, இசையமைப்பாளர், நடிகை போன்ற பன்முகத்திறமையை வெளிப்படுத்தியவர் நடிகை ஸ்ருதிஹாசன். இவர் இந்தியில் முதன்முதலாக அறிமுகமானாலும், முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியான ’ஏழாம் அறிவு’ படத்தில்தான் தமிழில் முதன்முதலாக அறிமுகமானார். அதற்கடுத்து, தமிழ்,தெலுங்கு,இந்தி என்று மும்மொழிகளிலும் நடித்து வருகிறார்.
இவர்,சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ’ஸ்ருதிஹாசன் தெலுங்கு சினிமாவை தவறாக விமர்சித்துவிட்டார்’ என்று தெலுங்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். அதனை தெளிவுபடுத்தும் விதமாக ஸ்ருதிஹாசன், தனது ட்விட்டர் பக்கத்தில், ”நான் தெலுங்கு சினிமா பற்றி தவறாக கூறியதாக வெளியாகும் தகவல்களில் உண்மை இல்லை.
’ரேஸ் குர்ரம், கப்பர் சிங் உள்ளிட்ட படங்களில் நடித்ததை பெருமையாகப் பார்க்கிறேன். அதுவும், கப்பர் சிங் படம் எனது வாழ்க்கையை மாற்றியது. தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் ஒரு பாகமாக இருப்பதை என் இதயத்தின் ஒரு பாகமாக கருதுகிறேன்.
அந்தப் பேட்டியில் இந்தி மற்றும் தென்னிந்திய படங்களில் நான் நடித்தது குறித்து கேட்டதற்கு மட்டுமே பதில் சொல்லி இருக்கிறேன். ஆனால், அந்தக் கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. இதன்மூலம் உங்கள் சந்தேகத்திற்கு விடை கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

