
ஒரே ஒரு காட்சி மட்டுமே ஒத்த செருப்பு படம் திரையிடப்படுவதாக நடிகர் பார்த்திபன் வேதனை தெரிவித்துள்ளார்.
பார்த்திபன் இயக்கத்தில் செப்டம்பர் 20ம் தேதி திரைக்கு வந்தப் படம் 'ஒத்த செருப்பு'. ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே ஒட்டுமொத்த திரைப்படத்திலும் தோன்றும் வகையிலான திரைக்கதை அமைத்து இந்தப் படத்தை அவரே இயக்கவும் செய்திருந்தார். இந்திய சினிமாவில் இதுவரை எவரும் கையாளாத இந்த முயற்சிக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர்.
இருப்பினும், திரையரங்குகளில் ஒத்த செருப்பு படத்திற்கு போதுமான காட்சிகள் ஒதுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. அதற்கு, சூர்யா நடிப்பில் அதே தேதியில் வெளியான காப்பான் படமும் ஒரு காரணம். அதேபோல், கடந்த வாரம் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான எங்கள் வீட்டு பிள்ளை படமும் நன்றாக செல்கிறது. அதனால், மேலும் ஒத்த செருப்பு படத்தின் காட்சிகள் குறைக்கப்பட்டன.
இந்நிலையில், தன்னுடைய படத்திற்கு திரையங்குகளில் காட்சிகள் குறைந்து கொண்டே செல்வது குறித்து நடிகர் பார்த்திபன் கவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசிய போது, “ஒத்த செருப்பு இப்போதுதான் பிக் அப் ஆகிறது. புதிய படம் வருவதால் திரையரங்குகளில் காட்சிகளை குறைப்பதுடன், படத்தையே எடுக்கின்றனர். ஒரே ஒரு காட்சி மட்டுமே திரையிடப்படும் சூழல் ஏற்பட்டிருப்பது.
இது ஒரு கலைஞனை சாகடித்து அவனுக்கு மாலை போட்டு, அந்த மாலையை எடுத்து புதுமணத்தம்பதிக்கு போடுவது மாதிரி உள்ளது. அமைச்சர் கடம்பூர் ராஜூ உடனடி நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளது நம்பிக்கை அளிக்கிறது” என்றார்.