சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள், விஞ்ஞானிகளின் வாழ்க்கை கதைகளை சினிமா ஆக்குவதில் தயாரிப்பாளர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அப்படி வெளியான சில பயோபிக் படங்கள் வசூலை வாரி குவித்துள்ளதால் இந்தப் போக்கு இப்போது அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது.
குத்துச்சண்டை வீராங்கனை ‘மேரி கோம்’ வாழ்க்கை கதை, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை கதை, தோனியின் கதை, நடிகர் சஞ்சய் தத்தின் கதையான, சஞ்சு, முன்னாள் ஹீரோயின் சாவித்ரியின் வாழ்க்கைக் கதையான ‘நடிகையர் திலகம்’ஆகிய படங்கள் வசூலில் சாதனை படைத்துள்ளன.
இதையடுத்து கிரிக்கெட் வீரர் கபில்தேவ், ஜெயலலிதா, ஸ்ரீதேவி, கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜ் உட்பட பலரின் வாழ்க்கை வரலாறு சினிமாவாக்கப்பட இருக்கிறது.
இதற்கிடையே, ஆந்திர மாநில மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாறு சினிமாகி உள்ளது. மேலும் மன்மோகன் சிங், தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்த என்.டி.ஆர் ஆடியோரின் வாழ்க்கை வரலாறும் பயோபிக் சினிமாவாகிறது.
அந்த வரிசையில் தற்போது முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்ணாண்டஸ் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட உள்ளது. முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சரான ஜார்ஜ் ஃபெர்ணாண்டஸ் கடந்த 29 ஆம் தேதி காலை காலமானார். 88 வயதான இவர், கடந்த பல வருடங்களாகவே நோயுற்றிருந்தார். கடந்த சில நாட்களாக பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்ததால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவர் மொராஜிதேசாய் பிரதமராக இருந்தபோது தொழில்துறை மத்திய அமைச்சராக இருந்துள்ளார். 1989-1990 கால கட்டத்தில் விபி சிங் பிரதமராக இருந்தபோது ரயில்வே துறை மத்திய அமைச்சராக இருந்திருக்கிறார். அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமாரக இருந்தபோது மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராகவும், மேலும் பல துறைகளில் அமைச்சராகவும் இருந்திருக்கிறார்.
இவர் பாதுகாப்புதுறை அமைச்சராக இருந்தபோதுதான் கார்கில் போர் மற்றும் பொக்ரான் நியூக்ளியர் சோதனை முயற்சி நடைபெற்றது. இதுமட்டுமல்லாமல் அந்தக் கால கட்டத்தில், வெளிப்படையாகவே விடுதலை புலிகளுக்காக ஆதரவு தெரிவித்தார்.
மத்திய அமைச்சர், ராஜ்யசபா உறுப்பினர், சமூக ஆர்வலர் என பல முகங்கள் ஜார்ஜ் ஃபெர்ணாண்டசுக்கு உண்டு. இந்நிலையில், ஜார்ஜ் ஃபெர்ணாண்டஸ் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட உள்ளது. இது குறித்து சிவசேன எம்பி சஞ்சய் ராவத் சில தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். இந்தப் படத்தை இயக்குனர் சுஜித் சிர்கர் இயக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் இதைத்தொடர்ந்து ஜார்ஜ் ஃபெர்ணாண்டஸ் வாழ்க்கை வரலாறு சுவாரஸ்யம் மிகுந்தது. ஆனால் இப்போது இந்தப் படத்தை இயக்க தனக்கு நேரம் இல்லை என சுஜித் சிர்கர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.