OTT ரிலீஸ்க்கு பின் ட்ரோல் செய்யப்பட்டும் ஷங்கரின் ’கேம் சேஞ்சர்’.. என்ன காரணம்?
ஷங்கரின் இயக்கத்தில் ராம் சரண், க்யாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா அஞ்சலி நடிப்பில் உருவான தெலுங்குப் படம் `கேம் சேஞ்சர்'. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10ம் தேதி தெலுங்கிலும், மற்ற மொழிகளில் டப் செய்யப்பட்டும் வெளியானது. படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. அதே நேரம் ஷங்கரின் முந்தைய படமான இந்தியன் 2-வுக்கு வந்த அளவு நெகட்டிவ் கருத்துகள் எழவில்லை.
ஆனால் மெல்ல மெல்ல `கேம் சேஞ்சர்' படத்தை ரசிகர்கள் மறந்திருந்த நிலையில், இப்போது ட்ரோலுக்கு உள்ளாகியிருக்கிறது. காரணம் இந்தப் படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் நேற்று, அதாவது பிப்ரவரி 7ம் தேதி வெளியானது. அப்படி என்ன விஷயம் ட்ரோல் செய்யப்படுகிறது? பார்க்கலாம்...
எங்கடா இங்க இருந்த காட்சிய காணும்..
`கேம் சேஞ்சர்' படத்தில் பல விஷயங்கள் லாஜிக்காக பொருந்தவில்லை என்பதும், ஒரு சினிமாவாக அதிலிருந்த பிரச்சனைகள் பற்றியும் பல விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் இப்போது சமூக வலைதளங்களில் `கேம் சேஞ்சர்' ட்ரோல் செய்யப்படுவதற்கு காரணம், தியேட்டர் வெர்ஷனில் இருந்த ஒரு காட்சி, ஓடிடி வெர்ஷனில் நீக்கப்பட்டிருப்பதுதான்.
`கேம் சேஞ்சர்' படத்தின் க்ளைமாக்ஸுக்கு முன்பு வரும் ஒரு காட்சிதான் அது. படத்தில் ஐபிஎஸ் ஆக வரும் ஹீரோ, பின்பு ஐ ஏ எஸ் ஆகவும், அதன் பின்பு தேர்தல் ஆணையராகவும் மாறுவார். அவர் Chief Electoral Officer ஆக மாறிய பின்பு உடனடியாக தேர்தல் அறிவிக்கப்படும். முதலமைச்சர் வேட்பாளராக வில்லன் எஸ்.ஜே.சூர்யா போட்டியிடுவார். தான் இந்த தேர்தலில் தோற்கக் கூடாது என்பதற்காக, வாக்குச்சாவடியில், Evm Machine-களை அடித்து நொறுக்குவார் எஸ்.ஜே.சூர்யா. எப்படி இந்த உடைந்த மிஷின்களை வைத்து நான் ஜெயிக்கப் போகிறேன் என ராம் சரணிடம் சொல்வார். பிறகு இதைத் தடுக்க ஹீரோ ராம் சரண் அவருடன் மோதுவார், இறுதியில் வில்லனை வீழ்த்தி, ஹீரோ வெற்றியடைவார். இது திரையரங்கில் வந்த வெர்ஷன்.
இதுவே ஓடிடியில் வெளியான `கேம் சேஞ்சர்' வெர்ஷனில், எஸ்.ஜே.சூர்யா - ராம் சரண் மோதல் மட்டுமே இருக்கும். Evm Machine உடைப்பது, எஸ்.ஜே.சூர்யாவின் திட்டம், அதை வீழ்த்தும் ராம் சரணின் ஸ்மார்ட் ப்ளான் என எதுவும் இருக்காது. ஆரம்பத்தில் வரும் சண்டை, பின்பு அக்காட்சியின் முடிவில் வரும் சண்டை மட்டுமே இருக்கும். இடையில் உள்ள டயலாக் போர்ஷனாக, கிட்டத்தட்ட 4 நிமிடங்கள் ஓடும் காட்சி டெலிட் செய்யப்பட்டுள்ளது. நீக்கப்பட்ட அந்தக் காட்சியில் ராம் சரண், எஸ்.ஜே.சூர்யாவை பார்த்து வில்லத்தனமாக சிரிக்கும் ஒரு ஷாட் வரும். அது தியேட்டரில் வந்த போதே பெரிய கிண்டலுக்கு உள்ளானது. எனவே இப்போது மீண்டும் அந்த கேலிகள் எழாமல் தவிர்க்கவே, ஒடிடியில் வெளியான `கேம் சேஞ்சர்' படத்திலிருந்து அக்காட்சி நீக்கப்பட்டுள்ளது என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.