பிரபாஸின் ’சாஹோ’வில் இருந்து வெளியேறிய இசை அமைப்பாளர்கள்!

பிரபாஸின் ’சாஹோ’வில் இருந்து வெளியேறிய இசை அமைப்பாளர்கள்!
பிரபாஸின் ’சாஹோ’வில் இருந்து வெளியேறிய இசை அமைப்பாளர்கள்!

பிரபாஸின் ’சாஹோ’ படத்தில் இருந்து, இசை அமைப்பாளர்கள் ஷங்கர் எஹசான் லாய் திடீரென விலகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

’பாகுபலி’ மற்றும் ’பாகுபலி 2’ படங்களுக்காக, 5 வருடங்களை செலவழித்த பிரபாஸ், அடுத்து நடிக்கும் படம், ’சாஹோ’. பிரமாண்ட ஆக்‌ஷன் படமான இதில் அவர் ஜோடியாக இந்தி நடிகை ஸ்ரத்தா கபூர் நடிக்கிறார். அருண் விஜய், நீல் நிதின் முகேஷ் வில்லன்களாக நடிக்கின்றனர். மற்றும் மந்திரா பேடி, ஜாக்கி ஷெராப் உட்பட பலர் நடிக்கின்றனர். மதி ஒளிப்பதிவு செய்கிறார். 

சுஜித் இயக்கும் இந்தப் படம், தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகிறது. ’டை ஹார்ட்’, ’டிரான்ஸ்பார்மர்ஸ்’ உட்பட பல ஹாலிவுட் படங்களில் பணியாற்றியுள்ள கென்னி பேட்ஸ், இதன் சண்டை காட்சிகளை அமைத்துள்ளார். படத்தில் இடம்பெறும் முக்கிய சண்டைக்காட்சியை அபுதாபியில் 60 நாட்களாக படமாக்கியுள்ளனர். இந்திய சினிமாவில் இதுவரை இடம்பெறாத வகையில் இந்த சண்டைக் காட்சி இருக்கும் என்று படக்குழு கூறியுள்ளது.

இந்தப் படத்துக்கு ஷங்கர் -எஹசான் -லாய் இசை அமைப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதாவது, பாடகர் ஷங்கர் மகாதேவன், எஹசான் நூரானி, லாய்மென் டோன்ஸா ஆகியோர் இணைந்து ஷங்கர் -எஹசான் -லாய் என்ற பெயரில் இசை அமைத்துவருகின்றனர். இந்தியில் பல படங்களுக்கு இசை அமைத்துள்ள இவர்கள், தமிழில் கமல்ஹாசனின் ஆளவந்தான், விஸ்வரூபம் படங்களுக்கு இசை அமைத்திருந்தனர். 

இந்நிலையில் ’சாஹோ’ படத்தில் இருந்து விலகுவதாக இவர்கள் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக ட்விட்டரில் வெளியிட்டுள்ள தகவலில், ‘’ரசிகர்களுக்கு ஒன்றைத் தெரிவித்துக்கொள்கிறோம். ’சாஹோ’ படத்தில் நாங்கள் விலகிவிட்டோம். படக்குழுவுக்கு வாழ்த்துகள்’’ என்று தெரிவித்துள்ளனர். 

படத்துக்கு இவர்களோடு மேலும் சில இசை அமைப்பாளர்களை பயன்படுத்த படக்குழு முடிவு செய்ததாகவும் தாங்கள் தனியாகத்தான் இசை அமைத்துவருகிறோம், மற்ற இசை அமைப்பாளர்களோடு இணைந்து பணியாற்ற முடியாது என்று இவர்கள் தெரிவித்ததாகவும் அதை படத்தயாரிப்பு ஏற்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதை அடுத்தே ஷங்கர் எஹசான் லாய் வெளியேறியதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com