முழுநீள ஆக்‌ஷனில் இறங்கிய ஷாருக்கான்! சாதித்தாரா, சோதித்தாரா? - `பதான்’ திரைப்பார்வை

முழுநீள ஆக்‌ஷனில் இறங்கிய ஷாருக்கான்! சாதித்தாரா, சோதித்தாரா? - `பதான்’ திரைப்பார்வை
முழுநீள ஆக்‌ஷனில் இறங்கிய ஷாருக்கான்! சாதித்தாரா, சோதித்தாரா? - `பதான்’ திரைப்பார்வை

இந்தியாவுக்கு எதிராக மிகப்பெரும் சதித்திட்டத்தை தீட்டியிருக்கும் கும்பலின் கண்ணில் மண்ணைத் தூவினாரா பதான் என்பதே ஷாருக்கான் நடித்திருக்கும் ‘பதான்’ படத்தின் ஒன்லைன்.

‘ராக்கெட்ரி’ (இந்தி வெர்ஷன்), ‘பிரமாஸ்திரா’ போன்ற படங்களில் தலைக் காட்டியிருந்தாலும் , கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் இடைவெளி என்பதால், ஷாருக்கானிற்கு இது நிச்சயம் மிகப்பெரிய கம்பேக் படமாக இருக்கும் என பேசப்பட்டது. அதேபோல், சமீப காலங்களில் அதிகரித்து வரும் பாய்காட் கலாசாரம். எல்லா பாலிவுட் படங்களையும் தொடர்ந்து பாய்காட் சொல்லி வந்த இந்தி ரசிகர்களை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்றே தெரியாமல் விழி பிதுங்கி நின்றனர் பாலிவுட் தயாரிப்பாளர்கள்.

இதற்கிடையே ஸ்பெஷலாக, பதான் படத்துக்கு பாடல் சர்ச்சை, பாடலில் ஆடை சர்ச்சை, கூட்டத்தில் ஆடும் டான்ஸ் மாஸ்டர்கள் சர்ச்சை என 'சோத்துல செங்கல்' கதையாக ஒரு க்ரூப் உருண்டுகொண்டு இருக்க, 'இப்ப ஆட்டோ ஓட்டறதா வேணாமா' நிலையில் தான் படக்குழு இருந்தது. இத்தனை பிரச்னைகளைக் கடந்து சாதித்திருக்கிறதா ‘பதான்’ திரைப்படம்? பார்ப்போம்!

முன்னாள் RAW அதிகாரியான `ஜிம்’மை ஒரு முக்கியமான தருணத்தில் இந்திய அரசு கைவிட்டுவிடுகிறது. இதனால் அவுட்ஃபிட்-X என்னும் அமைப்பை உருவாக்கி உலக நாடுகளுக்கு எதிராக நாச வேலைகள் செய்யும் ஸ்பெஷலிஸ்ட்டாக உருவாகியிருக்கிறார் அவர். இன்னொரு பக்கம், ஆர்ட்டிக்கிள் 370 என்னும் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்தை இந்திய அரசு ரத்து செய்துவிட்டதால், கடும்கோபத்தில் இருக்கும் பாகிஸ்தான் அதிகாரி ஒருவர், ஜிம்மின் துணையுடன் இந்தியாவின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து சில அசம்பாவிதங்களை நிகழ்த்த திட்டமிடுகிறார். இந்த சதித் திட்டத்தில் தீபிகா, சல்மான் எல்லாம் யார் பக்கம் என்பதாக விரிகிறது கதை.

யாஷ் ராஜ் ஃபிலிம்ஸின் (YRF Spy Universe) நான்காவது படமாக வந்திருக்கிறது இந்த ‘பதான்’. ஏற்கெனவே சல்லு பாயை வைத்து இரண்டு ‘டைகர்’ படங்கள், ஹ்ரித்திக் ரோஷன், டைகர் ஷெராஃபை வைத்து ‘வார்’ என படங்களை வெளியிட்ட யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் இந்தப் படங்களை எல்லாம் ஸ்பை யுனிவர்ஸ் என அழைக்கிறது. ‘பதான்’ திரைப்படத்திலும் சல்மான் கான் கேமியோவில் வருவதும், அடுத்த பாகத்தில் ஷாருக், ஹ்ரித்திக் கேமியோ வருவார்கள் என்றும் சொல்லப்படுகிறது. ரொமாண்டிக், ஃபேமிலி டிராமா மாதிரியான படங்களில் மட்டும் அதிகம் நடித்திருக்கும் ஷாருக், ஆக்சன் அவதாரம் எடுப்பதெல்லாம் எப்போதாவதுதான். அதிலும், இதற்கு முன்னர் இப்படி முழு நீள ஆக்‌ஷன் படத்தில் ஷாருக் பெரிதாக நடித்ததில்லை.

அந்த கடனையெல்லாம் மொத்தமாய் இதில் செட்டில் செய்திருக்கிறார் ஷாருக். பழனிமலை படிக்கட்டுகளைப் போல 8 பேக்ஸ், 10 பேக்ஸ் எல்லாம் இருக்கும் போல. முறுக்கேறிய உடல், பறந்து பறந்து அடிப்பது என எதிரிகளை துவம்சம் செய்கிறார். இரண்டு பாடல்கள், சண்டைக் காட்சிகள், எமோஷனல் காட்சிகள் என தீபிகாவும் குறைவில்லாத வேடம் தான். குட்டியூண்டு ஸ்பாய்லர்: கடும் விவாதங்களைக் கிளப்பிய தீபிகாவின் ஆடை குறித்த சர்ச்சைப் பாடல், படத்தில் அப்படியே தான் வருகிறது. அது யாருக்கும் எந்தவித தொந்தரவாகவும் இல்லை.

'அதிரடி வியாழனில் அடிதடி சண்டைக் காட்சிகள் அப்படித்தான் இருக்கும் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க' என்பதையெல்லாம் மீறி சில காட்சிகளும், அவை படமாக்கப்பட்ட விதமும் நமக்கு சில படங்களையும், விளம்பரங்களையும் நினைவுபடுத்துவதுதான் நகைப்புக்குரியது. தம்ஸ் அப் குளிர்பான விளம்பரத்தை நினைவுபடுத்தும் முதல் சண்டைக் காட்சி, இன்னர்ஸ் மாடல் போல், சில காட்சிகளுக்கு வரும் ஜான் ஆப்ரஹாம், வலி நிவாரணி மருந்து விற்பன்னர் போல் மாத்திரையுடன் அலையும் சல்மான், இப்படியாக ஆங்காங்கே விளம்பர பேக்கேஜ்களை படத்துக்கிடையே காண முடிகிறது. பெரிய பட்ஜெட், தொழில்நுட்ப புரட்சி எவ்வளவோ வந்துவிட்டாலும், இன்னும் க்ரீன் ஸ்கீரினில் பெப்பரப்பே என தெரியும் அளவில் காட்சிகளை எடுப்பது தான் ஏன் என புரியவில்லை.

லாஜிக் பெரிதாக இல்லையென்றாலும், போரடிக்காமல் விரைந்து செல்லும் திரைக்கதை நம்மை படத்துடன் ஒன்ற வைத்துவிடுகிறது. விஜயகாந்த், அர்ஜுன் நடிப்பில் நாம் பார்த்துப் பழகிய 'தாயின் மணிக்கொடி சொல்லுக ஜெய்ஹிந்த்' பாணியிலான கதை தான். ஆனாலும், சின்ன சின்ன திருப்பங்கள் மூலம் அதை சுவாரஸ்யப் படுத்தியிருக்கிறார்கள் ஸ்ரீதர் ராகவனும், அப்பாஸ் டயர்வாலாவும். ஜிம் ஏன் இப்படியானதொரு தீவிரவாதியாக மாறுகிறார் என்பதற்கான முன்கதையும் சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது. படம் முடிந்த பின்னர் வரும் போஸ்ட் கிரெடிட் காட்சியை மிஸ் செய்துவிடாதீர்கள். ஷாருக்கும், சல்மானும் ரகளை செய்திருக்கிறார்கள்.

முதல் காட்சியிலிருந்தே பாராட்டுக்களையும், வசூலையும் அள்ளிக்குவித்துவரும் ‘பதான்’ நிச்சயம் பாலிவுட்டின் இழந்த வசூலை மீட்டெடுக்கும் என்பதில் ஐயமில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com