ஷாரூக்கான் தயாரிப்பில் தமிழ், தெலுங்கில் ரீமேக் ஆகும் ஆலியா பட் திரைப்படம்

ஷாரூக்கான் தயாரிப்பில் தமிழ், தெலுங்கில் ரீமேக் ஆகும் ஆலியா பட் திரைப்படம்
ஷாரூக்கான் தயாரிப்பில் தமிழ், தெலுங்கில் ரீமேக் ஆகும் ஆலியா பட் திரைப்படம்

ஆலியா பட்டின் ‘டார்லிங்ஸ்’ திரைப்படம் விரைவில் தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக ஷாரூக்கானின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாலிவுட்டின் முன்னணி நடிகையான ஆலியா பட், ஷெஃபாலி ஷா, விஜய் வர்மா, ரோஷன் மாத்யூ ஆகியோர் நடிப்பில், கடந்த 5-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் நேரடியாக வெளியான திரைப்படம் ‘டார்லிங்ஸ்’. இந்தத் திரைப்படத்தை அறிமுக பெண் இயக்குநரான ஜஸ்மீட் கே ரீன் எழுதி இயக்கியிருந்தார். ஷாருக்கான், அவரது மனைவி கௌரி கான் ஆகியோரின் ரெட் சில்லிஸ் எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனமும், ஆலியா பட்டின் எட்டெர்னல் சன்ஷைன் தயாரிப்பு நிறுவனமும் இணைந்து இந்தப் படத்தை தயாரித்திருந்தது. இந்தப் படத்தை தயாரித்தன் மூலம் தயாரிப்பாளராகவும் ஆலியா பட் அறிமுகமாகியுள்ளார்.

வீட்டில் திருமணமானப் பெண்களுக்கு நிகழும் குடும்ப வன்முறையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தப் படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும்  நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அதேநேரத்தில் படத்தில் கணவனால் வன்முறைக்குள்ளாகும் காதல் மனைவி, தனது தாயாருடன் சேர்ந்து கொடூரமாக பழிவாங்குவது மட்டுமின்றி, அவரை கொலை செய்யும் அளவுக்கு துணிவதும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்நிலையில், இந்தப் படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்ய ஷாரூக்கானின் ரெட் சில்லிஸ் எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, அந்நிறுவனத்தின் சி.ஓ.ஓ. கௌரவ் வர்மா ஆங்கில இணையதளத்துக்கு அளித்துள்ளப் பேட்டியில், தமிழ் மற்றும் தெலுங்கு மண்ணிற்கு ஏற்றவாறு கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக கூறியுள்ளார்.

விரைவில் நடிகர், நடிகைகள் தேர்வு குறித்து அறிவிக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பலரும் இந்தப் படத்தின் ரீமேக் உரிமையை கேட்டுவருவதாகவும், ஆனால் ஷாரூக்கானின் ரெட் சில்லிஸ் எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனமே நேரடியாக தமிழ், தெலுங்கு உள்பட பல மொழிகளில் படத்தை தயாரிக்க உள்ளதாகவும் கௌரவ் வர்மா தெரிவித்துள்ளார். அட்லி இயக்கத்தில், நடிகர் ஷாரூக்கானின் ‘ஜவான்’ திரைப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட பல மொழிகளில் அடுத்த வருடம் வெளியாக உள்ளதால், எதிர்காலத்தை கருத்தில்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com