‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!

‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!

பெருமாள் முருகன் எழுதிய ‘வறுகறி’ சிறுகதைதான் பா.ரஞ்சித் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் தமிழ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ’சேத்துமான். வெளியாவதற்கு முன்பே பல்வேறு திரைப்பட விழாக்களில் பல விருதுகளை வென்று, இன்று சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியகியிருக்கிறது. உணவு அரசியலை பேசும் ’வறுகறி’ சிறுகதை, ’சேத்துமான்’ திரைக்கதையாக மாறி அதே உணர்வை பார்வையாளர்களுக்கு பற்ற வைத்ததா?

தாத்தா பேரனுக்கிடையே இருக்கும் எல்லையில்லா பாசப்பிணைப்புதான் கதை. அதனூடே, மாட்டுக்கறி சாப்பிடுகிறவர்களை அவமானமாகப் பார்க்கிறவர்கள், ’சேத்துமான்’ (பன்றி) கறி என்றதும் எவ்வளவு அவமானங்கள் என்றாலும் சகித்துக்கொள்ள தயாராக இருக்கிறார்கள் என்ற அரசியலை மையப்படுத்தியதுதான் ‘சேத்துமான்’ திரைக்கதையின் வெற்றி.

பங்காளிகளாக இருந்தாலும் இரண்டு பண்ணையார்களுக்குள் தீராப்பகை புகைந்துகொண்டே இருக்கிறது. ஆனால், சேத்துமான் கறி என்றதும் ஒட்டுமொத்த ஈகோ, பகை, குரோதம் எல்லாவற்றையும் மறந்து, ’எனக்கும் ரெண்டு துண்டு கறி கொடுக்கணும். நானும் இதுக்கு பணம் கட்டியிருக்கேன்’ என்று பங்குபோட வரும் அளவுக்கு சேத்துமான் கறிக்கு ஆசைப்படுகிறார்கள். இந்தப் பங்காளி சண்டைக்கு சிக்கிக் கொள்ளும் தாத்தாவுக்கு என்ன ஆகிறது என்பதே கதை.

தாத்தா பூச்சியப்பனாக நடித்திருக்கும் மாணிக்கம், பேரன் குமரேசனாக நடித்திருக்கும் அஸ்வின் இருவரும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். பூச்சியப்பனைப் பார்க்கும்போது இந்தக் கதையை எழுதிய பெருமாள் முருகனே நடித்திருப்பாரோ என்கிற சந்தேகம் வரும் அளவுக்கு பெருமாள் முருகனின் உருவ சாயலை ஒட்டியிருக்கிறது  மாணிக்கத்தின் முகம்.

டீக்கடையில் க்ளாஸில் கொடுக்காமல் ‘கப்’பில் டீ கொடுக்கும்போது, பூச்சியப்பனுடன் வரும் ரங்கா, நியாயமான கோபத்துடன் ’கப்புல கொடு’ என்கிறார். அப்போது, பூச்சியப்பன் பேசும் ’அவங்க குடிச்ச க்ளாஸுல நான் எப்படிக் குடிக்கிறதுன்னு யோசிக்கிறேன்’ என்பார். படம் திரையரங்குகளில் வெளியாகியிருந்தால் அந்தக் காட்சியில் கைத்தட்டல்களால் அதிர்ந்துபோயிருக்கும்.

”விட்டா நீயெல்லாம் வந்து எப்படி பாடம் நடத்தணும்னு சொல்வ போலிருக்கு” என்று சொல்லும் ஆசிரியரிடம், ’கடவுள்கிட்ட வரம் கேக்குற மாதிரி கேட்டேன்’ என்று பூச்சியப்பன் கைகூப்பி சொல்லும்போது, ”என்ன கடவுள் அது இதுன்னு சொல்லிக்கிட்டு, அவரே பகுதி நேர ஆசிரியர். அவருக்கு நிரந்தமா”ன்னு தெரியல என்று கெத்தாக பேசுவதாக இருக்கட்டும், பன்றி கேட்க வரும் பண்ணையாரிடம் நெஞ்சை நிமிர்த்தி பேசும் உடல் மொழியாக இருக்கட்டும், ”நமக்குன்னு ஒரு சுயதொழில் இருந்தா யார்க்கிட்டேயும் நாம அடிமையா இருக்கத்தேவையில்ல” என்று கூறுவதாகட்டும் கேடி பில்லாக்களுக்கு எதிரான கில்லாடி ர(கி)ங்காவாக சாட்டையை சுழற்றியிருக்கிறார் நடிகர் குமார்.

தமிழ் சினிமாவிற்கு கிடைத்திருக்கும் எதார்த்த கலைஞர்களின் பட்டியலில் சேர்ந்திருக்கிறார், பேரன் குமரேசனாக நடித்திருக்கும் அஸ்வின். தாத்தாவுடன் பள்ளிக்கு செல்லும் முதல் காட்சியிலேயே ஒரு கேள்வியை கேட்டு சமூகத்தின் மனசாட்சியை உலுக்கிவிடுகிறான். தாத்தாவிடம் அவர் எதார்த்தமாக கேட்கும் ஒவ்வொரு கேள்வியும் சமூகத்தின் மீது சாட்டையடிகளாக விழுகின்றன. தாத்தாவுக்கு ஏதோ ஆகிவிட்டதோ என்று எழுப்பிப் பார்த்து அவரது நெஞ்சில் காதை வைத்து இதயத்துடிப்பை சோதிக்கும் காட்சி, தாத்தாவைவிட்டு வேறு யாரிடமும் செல்லாமல் கட்டியணத்துக்கொள்ளும் காட்சிகளில் கண்களை குளமாக்கிவிடுகிறான். சிறுவனுக்கே உண்டான சின்ன சின்ன சேட்டைகள் ரசிக்கவைக்கின்றன. ”கறித்துண்டு குறையுதுன்னு உன் ஆட்டுக்குட்டியை அடிச்சிட போறாங்க” என்று சொல்லும்போது ஓடிப்போய் ஆட்டுக்குட்டியை பாதுகாக்கும்போது குபுக்கென்று சிரிக்கவைத்து விடுகிறான்.

இவர்களுக்கு அடுத்ததாக நடிப்பில் காட்சிக்கு காட்சி சிரிப்பால் தெறிக்க விடுவது வெள்ளையனாக நடித்துள்ள பிரசன்னாதான். மனைவியின் கடுமையான சாடலை எல்லாம் கண்டும் காணாததுபோல் வெளிப்படுத்தும் முக ரியாக்‌ஷன்கள், மான் வேட்டைக்கு செல்வதுபோல சேத்துமான் தேடலில் ஈடுபடுவது, சேத்துமான் குறித்த ஹெல்த் டிப்ஸ்களை சுவைபட வாரி வழங்குவது, கறி சமைத்ததும் முதலில் பூச்சியப்பனுக்கு கொடுக்கும் மனப்பாங்கு, பங்காளி என்கிற பகையாளியை வெறுத்து சண்டைபோடுவது என படம் முழுக்க வலம் வந்து பார்வையாளர்களின் மனதை கொள்ளையடிக்கிறார் வெள்ளையன்.

இறைச்சி அரசியல் குறித்த பார்வையை மக்களுக்கு தெளிவுபடுத்த, வியாபார நோக்கமின்றி படம் தயாரித்த பா.ரஞ்சித்தை வெறும் பாராட்டுவதோடு நிறுத்திக்கொள்ளக்கூடாது. இதுபோன்ற படங்களை இயக்க, தயாரிக்க பொதுச்சமூகம் அவரை ஊக்கப்படுத்தவேண்டும். தொடர்ந்து தனது கலைப்படைப்புகள் மூலம் ஆண்டாண்டு காலமாக பிணைக்கப்பட்டிருக்கும் அடிமை விலங்குகளை உடைத்தெறிகிறார் பா.ரஞ்சித். முதல் படத்திலேயே இதுபோன்ற கதைக்களத்தை தேர்ந்தெடுக்க இயக்குநர் தமிழுக்கு தைரியம் அதிகம் என்றுதான் சொல்லவேண்டும். எழுத்தாளரின் சிறுகதையை திரைக்கதையாக்கி பார்வையாளர்களிடம் அப்படியே அந்த உணர்வை கடத்தியதில் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் தமிழ்.

கதாப்பாத்திரங்களைப் போலவே பிரதீப் காளிராஜாவின் ஒளிப்பதிவும், பிந்து மாலினியின் இசையும் மிக எதார்த்தமாக பிண்ணிக்கொண்டிருக்கின்றன. ஸ்டன்னர் சாமின் க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சி வழக்கமான சினிமாக்களில் வருவதுபோல் இல்லாமல் படுபயங்கரமாக அதே நேரத்தில் தத்ரூபமாக காட்சிபடுத்தப்பட்டிருக்கிறது.

மாணவர்கள்- ஆசிரியர்கள் நிரப்பப்படாத அருகமைப் பள்ளிகளை மூடிவிட்டு ஒருங்கிணைந்த பள்ளிகளைக் கொண்டுவரும் மத்திய அரசின் திட்டத்தையும் விமர்சித்திருக்கிறது திரைக்கதை. அதாவது, பள்ளிகளை மூடி தூரத்தில் கொண்டுபோனால் பூச்சியப்பனைப் போன்றவர்கள் என்ன செய்வார்கள் என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது.

சேத்துமானைப் பங்குபோட பங்காளிகள் சண்டை போட்டுக்கொள்ளும் காட்சிகள் செம சுவாரஸ்யம். அதுவும், கறி வெந்துகொண்டிருக்கும்போதே சுப்பிரமணி எடுத்து டேஸ்ட் செய்து, ’இன்னும் வேகணும்’ என்று சொல்லும்போதும் பங்கு பிரிப்பவரிடம் கேட்காமலேயே, எக்ஸ்ட்ரா கறி எடுத்து சாப்பிட்டு சண்டை போடுவதும் சேத்துமான் கறியின் மீதான ஆவலை பார்வையாளர்களுக்கு கடத்தி விடுகிறார் இயக்குநர் தமிழ்.

சேத்துமான் கறி விருந்தில் கலந்துகொண்டிருக்கும் அவனது பள்ளி ஆசிரியர், குமரேசனை அழைத்து “நான் இங்க வந்திருக்கிறதை யார்க்கிட்டேயும் சொல்லாத. உனக்கு ஃபர்ஸ்ட் மார்க் போடுறேன்” என்று சொல்லும்போது நான் ஆல்ரெடி எல்லா பாடத்திலேயும் ஃபர்ஸ்ட் மார்க்தான் வாங்கிக்கிட்டிருக்கேன் என்று சொல்லும்போது சிரிப்பும் கைத்தட்டலும் ஒன்றிணைந்து கொள்கின்றன.

காதல், சேசிங், ஃபைட்டிங், குத்து சாங் என பார்த்து பழகியவர்களுக்கு இந்தப் படம் கொஞ்சம் ஏமாற்றத்தைக் கொடுக்கலாம். சிறுகதையைப் போலவே உடனேயே முடிந்துவிடுவதும் படத்தின் மைனஸ்தான். திரைக்கதை கொஞ்சம் எளிதில் ஊகிக்க முடிவதாக இருப்பதும் சின்ன குறைதான்.

சேத்துமானுக்காக சாதி மறந்து, பகை மறந்து சாப்பிட முயல்பவர்கள், மாட்டுக்கறி சாப்பிடுகிறவர்களை மட்டும் ஏன் சாதிய கண்ணோட்டத்துடன் பிரித்துப் பார்க்கவேண்டும்? சாப்பிடுகிறவர்களை சாதிக்குள் அடைத்து இழிவு படுத்துவது ஏன்? சாதி என்கிற சாக்கடைக்குள் சேத்துமானைப்போல் உழன்றுகொண்டிருப்பது ஏன்? இது போன்ற கேள்விகளை எழுப்பி க்ளைமாக்ஸில் இதயத்தில் ஈட்டியை பாய்ச்சியதுபோல், நம்மை கண்கலங்கி அழவைத்து விடுகிறது ‘சேத்துமான்’.

இந்த ’சேத்துமான்’ உணவு அரசியலைப் பேசும் ’ஸ்ட்ராங் மேன்’.

- வினி சர்பனா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com