இரவு வரை இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்.. காலையில் மரணம் - சித்ரா குறித்து வருத்தத்தில் ரசிகர்கள்
சென்னை தனியார் ஓட்டலில் தூக்கிட்ட நிலையில் சின்னத்திரை நடிகை சித்ராவில் உடல் மீட்கப்பட்டது. இவர் 12 மணி நேரத்துக்கும் முன்பு வரையிலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டீவாக இருந்துள்ளார்
திருவான்மியூரை சேர்ந்த சின்னத்திரை நடிகை சித்ரா.(29). தொகுப்பாளினியாக தனது திரைப்பயணத்தை தொடங்கிய சித்ரா நடிகை, மாடலிங், டான்சர், பாடகர், உளவியலாளர், என பன்முகத் திறமைகளை வெளிப்படுத்தி வந்தார். இறுதியாக தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் முல்லை என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார்.
இவருக்கும் ஹேம்நாத் என்பவருக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி மாதம் திருமணம் நடைபெறுவதாக இருந்துள்ளது. இதைத்தொடர்ந்து சீரியலில் நடிப்பதற்காக சித்ரா சென்னை அருகேயுள்ள நாசரேத்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்துள்ளார். அவருடன் ஹேம்நாத்தும் தங்கி இருந்துள்ளார்
இந்நிலையில், இன்று அதிகாலை, நடிகை சித்ரா ஓட்டல் அறையில் இருந்து தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்கப்பட்டார். அவரின் உடல் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்கொலைக்கான காரணம் என்னவென்பது குறித்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். போலீசாரின் முழுமையான விசாரணைக்கு பிறகே உண்மை விவரம் தெரியவரும்.
இதனிடையே சித்ரா 12 மணி நேரத்துக்கும் முன்பு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் 41ஆயிரம் லைக்குகளை குவித்துள்ளது. இரவில் மகிழ்ச்சியாக புகைப்படம் பகிர்ந்துள்ள சித்ரா, அதிகாலையில் தற்கொலை செய்துகொண்டது ஏற்றுக்கொள்ளமுடியாத மனவலியை தருவதாக ரசிகர்கள் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இதுபோன்ற மகிழ்ச்சியான புகைப்படங்களையெல்லாம் வெளியிட்டுவிட்டு ஏன் இவ்வாறு செய்தீர்கள் என ரசிகர்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். சித்ராவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 1.5 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள். இதற்கிடையே சித்ராவின் மரணம் தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். ஹோட்டல் ஊழியர்கள், நிர்வாகத்தினர், சித்ரா அறையில் ஹேம்நாத் உள்ளிட்ட பலரிடமும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்: