‘கொக்கி குமாரின் புது அவதாரம்’: புதுப்பேட்டை2-ஐ உறுதி செய்த செல்வராகவன்..!

‘கொக்கி குமாரின் புது அவதாரம்’: புதுப்பேட்டை2-ஐ உறுதி செய்த செல்வராகவன்..!

‘கொக்கி குமாரின் புது அவதாரம்’: புதுப்பேட்டை2-ஐ உறுதி செய்த செல்வராகவன்..!
Published on

தனுஷ் - செல்வராகவன் கூட்டணியில் 2006 ஆண்டு வெளியான திரைப்படம் புதுப்பேட்டை. வெளியான நேரத்தில் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும், ஆண்டுகள் செல்ல செல்ல இந்தப் படத்திற்கு பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகி வருகிறது. சினிமா குழுவினர் பலரும் அவ்வப்போது சிறப்பு காட்சிகளுக்கும் ஏற்பாடு செய்து படம் குறித்து பேசிய வண்ணம் இருக்கிறார்கள்.

படத்தின் கதை உருவாக்கம், இசை, எடிட்டிங், கேமரா பணி என அனைத்தையும் தற்போது பலரும் வியந்து பாராட்டுகிறார்கள். தனுஷின் கொக்கி குமார் கதாபாத்திரத்திற்கு இன்றளவும் ரசிகர்கள் இருக்கிறார்கள். சிநேகாவின் கதாபாத்திரம் மனதை தொடும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டிருந்தது. புதுப்பேட்டை இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்று செல்வராகவனுக்கு ரசிகர்கள் தொடர்ந்து அன்பு வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.

காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய மூன்று படங்களில் தனுஷுடன் செல்வராகவன் இணைந்து பணியாற்றியுள்ளார். இதனிடையே, என்.ஜி.கே படத்திற்கு பிறகு புதுப்பேட்டை இரண்டாம் பாகத்தை எடுக்க செல்வராகவன் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. வடசென்னை படத்தின் போது புதுப்பேட்டை2 படத்தில் நடித்த தயாராக இருப்பதாகவும், ''அண்ணன் செல்வராகவன் கைகளில்தான் படம் எப்போது என்பது உள்ளது'' என்றும் தனுஷ் கூறியிருந்தார். சமீபத்தில் கூட அந்த கருத்தினை மீண்டும் கூறினார்.

ஆனால், செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். இந்தப் படத்திற்கு தொடக்கத்தில் வரவேற்பு இல்லை. ஆனால், ஆண்டுகள் பல சென்ற பின்னர் இன்று பெரிய சினிமா ரசிகர்கள் பட்டாளமே ஆயிரத்தில் ஒருவன் படத்தை வியந்து வியந்து பேசுகிறார்கள். எப்படி இப்படியொரு படத்தினை எடுத்தார் என்று புகழ்ந்து தள்ளுகிறார்கள்.

அதனால், சோழனின் பயணம் தொடர வேண்டும் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிவருகின்றனர். அதனால், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் இதில் எந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை செல்வராகவன் எடுக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

இந்நிலையில், அடுத்ததாக தனுஷ் உடன் இணைந்து புதுப்பேட்டை2 படத்தை எடுக்கவுள்ளதை இயக்குநர் செல்வராகவன் உறுதி செய்துள்ளார். கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய செல்வராகவன், ‘என்.ஜி.கேவுக்கு அடுத்ததாக தனுஷூடன் இணைந்து பணியாற்றவுள்ளேன். நீண்ட நாட்களாக நாங்கள் பேசிக் கொண்டிருந்த புதுப்பேட்டை2 படத்தினை எடுக்கப் போகிறேன்’ என்று கூறியுள்ளார்.

கர்ணன் படப்பிடிப்பை முடித்துவிட்டு தன்னுடைய மூன்றாவது பாலிவுட் படமான அந்தராங்கி ரே படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் தனுஷ். இதற்கான படப்பிடிப்பு உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்று வருகிறது. அந்தராங்கி ரே படப்பிடிப்புகள் முடிந்தவுடன் புதுப்பேட்டை 2 படத்திற்கான படப்பிடிப்புகள் தொடங்கும் என தகவல்கள் கூறுகின்றன. முன்னதாக, அடுத்தப்படத்திற்கான கதையை முடித்துள்ளதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் செல்வராகவன் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com