சினிமா பைனான்சியர் அன்புச்செழியனை உத்தமர் என கூறியிருந்த இயக்குநர் சீனு ராமசாமி, தற்போது அசோக் குமார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
சீனு ராமசாமி ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில், வியாபாரமும் கலையும் முட்டிக்கொண்ட துயரத்தில் அசோக் குமார் இந்த முடிவை எடுத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். பைனான்சியர் அன்புச்செழியனை ஒருமுறை விமான நிலையத்தில் சந்தித்தபோது, ஒருவர் 20 கோடி தர வேண்டும், மற்றொருவர் 30 கோடி ரூபாய் தர வேண்டும் என அவர் கூறியதாக சீனு ராமசாமி தெரிவித்துள்ளார். அவ்வளவுதான் அவரை தமக்கு புரியும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். தான், அன்புச்செழியனின் சாதிக்காரன் இல்லை என்றும் வட்டிக்கு வாங்கி படம் எடுப்பவன் இல்லை எனவும் சீனு ராமசாமி கூறியுள்ளார். 70 வருடங்களாக சினிமாத் துறையை பைனான்சியர்கள்தான் இயக்கி வந்துள்ளதாகவும் அரசுக் கடன் கிடையாது எனவும் தெரிவித்துள்ளார். அதிக பணம் பெறுவது, தேவைக்கு அதிகமாக வட்டி கட்டுவது ஆகியவற்றுக்கு திரைத்துறையைச் சேர்ந்த சங்கங்கள் சில கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் எனவும் இயக்குநர் சீனு ராமசாமி வலியுறுத்தியுள்ளார்.