தொடரும் சம்பவங்கள் | சல்மான் கான் வீட்டிற்குள் நுழைய முயன்ற பெண் கைது!
பிரபல பாலிவுட் நடிகர்களில் சல்மான் கானும் ஒருவர். இவருடைய குடியிருப்பு, மும்பையின் பாந்த்ரா பகுதியில் அமைந்துள்ளது. இந்த நிலையில், கடந்த ஆண்டு ஏப்ரல் 14-ஆம் தேதி அதிகாலை சல்மான் கான் வீடு அருகே துப்பாக்கிச்சூடு நடந்தது. இச்சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். இதனைத்தொடர்ந்தும் பல்வேறு முறை சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. 2023ஆம் ஆண்டில், பிஷ்னோய் கும்பல் அழிக்கத் திட்டமிட்ட 10 முக்கிய இலக்குகளின் பட்டியலில் சல்மான் கான் முதலிடத்தில் இருப்பதாக தேசிய புலனாய்வு நிறுவனம் (NIA) தெரிவித்திருந்தது. இதற்கிடையே, இவ்வாறு நடைபெறும் அச்சுறுத்தல் சம்பவங்களால் நடிகர் சல்மான் கான் தனது வீட்டின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக பால்கனி பகுதியில் குண்டு துளைக்காத கண்ணாடிகளைப் பொருத்துவதாகக் கூறப்படுகிறது.
மேலும், சல்மான் கானுக்கு மத்திய அரசின் சார்பில் ஒய்-பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. தவிர, உயர் தொழில்நுட்ப 'சிசிடிவி' கேமராவும், வீட்டைச் சுற்றி ரேஸர் கம்பி வேலியும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நடிகர் சல்மான் கான் வீட்டிற்குள் அத்துமீறி நுழைய முயன்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இஷா சாம்ரா என்ற பெண்ணிடம் மும்பை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக, கடந்த மே 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் இரண்டு முறை சல்மான் கானின் வீட்டுக்குள் நுழைய முயன்ற சட்டீஸ்கரைச் சேர்ந்த ஜிதேந்திர குமார் சிங் (23) கைது செய்யப்பட்டு அவரும் விசாரணை வளையத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.