பல கெட்அப்புகளில் அசத்தும் ‘சீதக்காதி’ விஜய்சேதிபதி!
விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகி வரும் ‘சீதக்காதி’ படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிதிருப்பவர் விஜய் சேதுபதி. ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு கெட் அப்பில் வந்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறார். அடுத்தடுத்த பட அப்டேட்ஸ், அடுத்தடுத்த ரிலீஸ் எனத் திரையுலகில் விஜய் சேதுபதி வேகமாக இயங்கி வருகிறார். சமீபத்தில் விஜய் சேதுபதியின் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தனது அடுத்த படத்தின் இரண்டாவது போஸ்டரையும் வெளியிட்டுள்ளார் விஜய் சேதுபதி.
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் 25 ஆவது படம் "சீதக்காதி". இந்தப் படத்தில் இவர் 80 வயது முதியவர் தோற்றத்தில் நடிக்கிறார். காமெடி காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் நம்யா நம்பீசன் உள்ளிட்ட முக்கிய நாயகிகள் 5 பேர் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் யாரும் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. மிகவும் வயதான தோற்றத்தில் கால் மேல் கால் போட்டு கொண்டு நாற்காலியில் அவர் அமர்ந்திருக்கும் ‘சீதக்காதி’ முதல் போஸ்டரை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.
இந்நிலையில் படத்தின் இரண்டாவது போஸ்டர் இன்று மாலை வெளியானது. இந்த போஸ்டரில் கையில் வில்லுடன் அரசர் கால கெட்அப்பில் விஜய் சேதுபதி இருக்கிறார். இந்த போஸ்டரையும் வழக்கம் போல் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.