நீண்ட இடைவெளிக்குப் பின் இளையராஜா - எஸ்.பி.பி.ஒத்திகை
நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இளையராஜாவை சந்தித்து பேசினார்.
கச்சேரிகளில் அனுமதி இல்லாமல் தனது பாடல்களைப் பாட இசையமைப்பாளர் இளையராஜா எதிர்ப்பு தெரிவித்து வருவது அனைவரும் அறிந்தது. பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் வெளிநாடுகளில் நடந்த கச்சேரிகளில் தனது இசையில் உருவான பாடல்களை பாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நோட்டீஸூம் அனுப்பினார்.
இதனால் கச்சேரிகளில் இளையராஜாவின் பாடல்களை எஸ்பிபி பாடமல் இருந்தார். ஆனால் சில நாட்களில் நான் இளையராஜாவின் பாடலை பாடுவேன் எனவும் என் மீது அவர் வழக்கு தொடர்ந்தால் அதை சட்டப்படி சந்திப்பேன் எனவும் பாலசுப்ரமணியம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், வருகின்ற ஜூன் மாதம் இரண்டாம் தேதி தமிழ்நாடு மியூசிக் யூனியன் நடத்தும் இளையராஜா இசைநிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் கே.ஜே. யேசுதாஸ் பங்கேற்கின்றனர். இதற்கான ஒத்திகை இன்று நடைபெற்றது. கருத்து வேறுபாடு காரணமாக நீண்ட நாட்கள் பேசாமல் இருந்த எஸ்பிபியும் இளையராஜாவும் இன்று சந்தித்து ஒத்திகை பார்த்தனர்.