சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’
‘பொன்னியின் செல்வன்’ நாவலை எம்.எக்ஸ் பிளேயர் நிறுவனம் சவுந்தர்யா ரஜினிகாந்தின் மே6 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து வலைத் தொடராக உருவாக்க உள்ளது.
இந்த வலைத்தொடர் 10- 11 ஆம் நூற்றாண்டுகளின் சோழ சாம்ராஜ்ய பேரரசரான அருள் மொழிவர்மனின் வாழ்க்கையைப் பற்றிய சரித்திர எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியால் எழுதப்பட்ட ‘பொன்னியின் செல்வன்’ வரலாற்று காவியத்தின் தழுவலாகும்.
கிராபிக்ஸ் டிசைனரும், இயக்குனரும் தயாரிப்பாளருமான சவுந்தர்யா ரஜினிகாந்த் இந்த வரலாற்று வலைத்தொடரின் தயார்ப்பாளர்- கிரியேட்டிவ் இயக்குநராக பணியாற்ற இருக்கிறார்.
சவுந்தர்யா ரஜினிகாந்த், அனிமேஷன் படமான ‘கோச்சடையான்’, நடிகர் தனுஷ் நடித்த ‘விஐபி2’ திரைப்படங்களை இயக்கியுள்ளார். மேலும் கோவா திரைப்படத்தை தயாரித்துள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய சவுந்தர்யா ரஜினிகாந்த், “இந்த வலைத்தொடர், தமிழகத்தை ஆட்சி செய்த சோழ அரச பரம்பரையின் ஆட்சி காலைத்தை பற்றிய விறுவிறுப்பும், வீரமும், தொன்மையும், காதல் மற்றும் நகைச்சுவையும் கலந்த காவியமாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து எம்.எக்ஸ் பிளேயர் நிறுவனத்தின் சி.இ.ஓ கரன் பேடி பேசுகையில், “இந்த வலைத்தொடர் மூலக்கதையை உயிரோட்டத்துடன் இணைய மேடையில் கொண்டு வரும் எம்.எக்ஸ் பிளேயரின் கொள்கையையொட்டியே நிகழ்ந்துள்ளது. இந்த வலைத்தொடர் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், போஜ்புரி மொழிகளில் உருவாகிறது. சவுந்தர்யாவுடன் கைகோர்ப்பதில் பெருமை கொள்கிறோம். அவருடைய தனித்துவம் மிக்க, பிரம்மாண்டமான தொலைநோக்குப் பார்வையுள்ள அணுகுமுறை அசாத்தியமாக உள்ளது. மேலும் இந்த வலைத்தொடர் அதிக பார்வையாளர்களை ஈர்க்கப் போவது உறுதி” எனத் தெரிவித்தார்.