சசிகுமாரின் ‘காமன் மேன்’ பட டைட்டில் மாற்றம் - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சசிகுமாரின் ‘காமன் மேன்’ பட டைட்டில் மாற்றம் - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சசிகுமாரின் ‘காமன் மேன்’ பட டைட்டில் மாற்றம் - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இயக்குநரும், நடிகருமான சசிகுமாரின் நடிப்பில் தயாராகி வரும் ‘காமன் மேன்’ படத்தின் பெயர் மாற்றப்பட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் நடிகர் சசிகுமார் ‘காமன் மேன்’ என்ற படத்தில் நடித்து வந்தார். செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர், கிளிம்ப்ஸ் வீடியோ ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்தப் படத்தில் சசிகுமார், திரைப்பட சவுண்ட் இன்ஜினீயராக நடிக்கிறார். கன்னட திரையுலக நடிகை ஹரிப்பிரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

இந்தப் படத்தில் ரத்தம் உறைய வைக்கும் கொலை குற்றவாளியாகவும், சைக்கோ வில்லனாகவும் நடிகர் விக்ராந்த் நடித்துள்ளார். இந்தப் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானப்போது, 'காமன் மேன்' என்ற தலைப்பின் உரிமை எங்களிடம் உள்ளது என்று ஏ.ஜி.ஆர் ரைட் பிலிம்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனம் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் முறையீடு செய்தது.

இயக்குநர் சுசீந்திரனிடம் இணை இயக்குநராக பணியாற்றிய விஜய் ஆனந்த் சார்பில், கடந்த 2018-ம் ஆண்டே 'காமன் மேன்' என்கிற தலைப்பு தென்னிந்திய திரைப்பட சேம்பரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த உரிமை தொடர்பாக அனைத்து ஆதார ஆவணங்களும் தங்களிடம் இருப்பதாக ஏ.ஜி.ஆர் ரைட் பிலிம்ஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது. சசிகுமார் படத்தின் 'காமன் மேன்' என்ற தலைப்பை, சென்சார் போர்டு ஏ.ஜி.ஆர். ரைட் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு முறையாக கொடுத்துள்ளதாகவும் கூறப்பட்டது.

இதனால் சசிகுமாரின் ‘காமன் மேன்’ படத்தின் தலைப்புக்கு சிக்கல் எழுந்ததாகக் கூறப்பட்டநிலையில், தற்போது டைட்டில் மாற்றப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ‘நான் மிருகமாய் மாற’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் சில காரணங்களால், படத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com