சர்கார் போஸ்டர் விவகாரம்: நடிகர் விஜய் - முருகதாஸ் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு !
சர்கார் போஸ்டர் விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய், இயக்குநர் முருகதாஸ் 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘சர்கார்’. இந்தபடத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், ஜூன் 21 ஆம் தேதி வெளியானது. போஸ்டரில் விஜய் புகைப்பிடிப்பது போல் இருந்ததால் அதுகுறித்து விமர்சனங்கள் எழுந்தன. சில கட்சிகளும் அந்தக் காட்சியை நீக்க வேண்டும் என கடுமையாக எதிர்த்தன. இதையடுத்து புகைப் பிடித்தபடி உள்ள விஜய்யின் படத்தை இணையதளங்களில் இருந்தும், சமூக வலைத்தளங்களில் இருந்தும் நீக்க வேண்டும் என்று நடிகர் விஜய், இயக்குநர் முருகதாஸ் ஆகியோருக்கு பொதுசுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியது.
அத்துடன் உடனடியாக நீக்காவிட்டால் சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் புகைப்பழக்கத்தை ஒழிக்க அரசு மேற்கொள்ளும் முயற்சிக்கு திரைத்துறையை சார்ந்தவர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் பொது சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டது. இந்நிலையில் நடிகர் விஜய் புகைப்பிடிப்பது போல் வெளியிடப்பட்ட ‘சர்கார்’ படத்தின் போஸ்டர் நீக்கப்பட்டன. அதனை உறுதிப்படுத்தும் வகையில் தயாரிப்பு நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் போஸ்டர் நீக்கப்பட்டது.
இந்த நிலையில் சர்கார் பர்ஸ்ட்லுக் போஸ்டரில் புகைப்பிடிக்கும் காட்சியை விளம்பரப்படுத்தியதற்கு ரூ.10 கோடியை அடையாறு புற்று நோய் மருத்துவ மையத்திற்கு இழப்பீடாக வழங்கக்கோரி பொது நல வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தநிலையில் நடிகர் விஜய், இயக்குநர் முருகதாஸ் 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.