“எவ்வளவோ பேசிபார்த்தோம், முருகதாஸ் பிடிவாதமாகவே இருந்தார்” கே.பாக்கியராஜ்

“எவ்வளவோ பேசிபார்த்தோம், முருகதாஸ் பிடிவாதமாகவே இருந்தார்” கே.பாக்கியராஜ்
“எவ்வளவோ பேசிபார்த்தோம், முருகதாஸ் பிடிவாதமாகவே இருந்தார்” கே.பாக்கியராஜ்

சமரசம் செய்ய எவ்வளவோ பேசிபார்த்தோம், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கடைசி வரை பிடிவாதமாகவே இருந்தார் என்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் கே.பாக்கியராஜ் கூறியுள்ளார்.

‘சர்கார்’ படத்துக்கு தடை கோரி வருண் என்ற ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அதில் முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியாகவுள்ள ‘சர்கார்’படத்தின் கதையும், திரைக்கதையும் தன்னுடையது என்றும் 'செங்கோல்' என்ற தலைப்பில் அந்தக் கதையை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் தான் பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் தனது கதையை திருடி 'சர்கார்' என்ற தலைப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் படம்  இயக்கியுள்ளார் என்றும் தனது மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென்றும் முறையிட்டுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தயாரிப்பு நிறுவனம், தென்னிந்திய திரைப்பட கதையாசிரியர்கள் சங்கம் அக்டோபர் 30க்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், செங்கோல் என்ற கதையும், சர்கார் படக் கதையும் ஒன்றுதான் என்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் உறுதி செய்துள்ளது. இயக்குநர் பாக்கியராஜ் தலைவராக உள்ள இந்த அமைப்பு வழக்கு தொடர்ந்த வருணுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இதனை குறிப்பிட்டுள்ளது. அதில், தங்கள் பக்கம் நியாயத்திற்காக நீங்கள் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்வதை தடை செய்ய மாட்டோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, முழுமையாக உதவ முடியாமைக்கு வருந்துகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த விவகாரம் தொடர்பாக புதிய தலைமுறைக்கு இயக்குநர் கே.பாக்கியராஜ் அளித்த பேட்டியில், “புகார் வந்த பின்னர் இருதரப்பினரையும் விசாரித்தோம். முருகதாஸிடம் அவருடைய கதையை கேட்டோம். இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தில் கதையின் முக்கியமான கரு ஒன்றாகவே இருந்தது. அதனால், இதனை பேசி முடிக்கவே முடிவு செய்தோம். ஆனால், முருகதாஸ் அதற்கு மறுத்துவிட்டார்.

தனிப்பட்ட முறையில் இந்தச் செய்தி வெளியே செல்லாமல் இருக்க எவ்வளவோ முயற்சி செய்தேன். அது சரியாக வரவில்லை. வருண் பெயருக்கு கொஞ்சமாவது கிரிடிட் கொடுக்குமாறு முருகதாஸிடம் கேட்டுக் கொண்டோம். ஆனால், தன்னுடைய கதைதான் என்பதில் முருகதாஸ் கடைசி வரை பிடிவாதமாக இருந்துவிட்டார். எதுவாக இருந்தாலும் நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று உறுதியாக இருந்தார். அடுத்த முறை இதுபோன்ற எந்த பிரச்னையும் ஏற்பாடாமல் இருக்க நடவடிக்கை எடுப்போம்” என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com