‘லக்ஷ்மி’ குறும்பட இயக்குநரின் படைப்பில் வெளியான ‘மா’..!
சர்ச்சைக்குள்ளான ‘லக்ஷ்மி’ குறும்படத்தின் இயக்குநர் சர்ஜூன் கேஎம் தனது அடுத்த குறும்படத்தை இயக்கியுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் இப்போது நாளுக்கு நாள் ஒரு ட்ரெண்டிங். அப்படி கடந்த நவம்பர் மாதம் ட்ரெண்டான விஷயம் தான் ‘லக்ஷ்மி’ குறும்படம். ஒரு சில நாட்களில் புது விஷயங்கள் கிடைத்தவுடன் பழையவனவற்றை மறந்துவிடும் சமூக வலைத்தளவாசிகள் ‘லக்ஷ்மி ’ குறும்படம் பற்றி மட்டும் தொடர்ந்து கிட்டத்தட்ட ஒருமாத காலமாக பேசிக்கொண்டிருந்தனர். குறும்படத்திற்கு ஆதரவும், எதிர்ப்பும் அதிகளவில் இருந்ததுதான் அத்தகைய ட்ரெண்டிற்கு காரணம். சிலரோ லக்ஷ்மி குறும்படம் பெண்களின் பாலியல் சுதந்திரத்தை பற்றி பேசுவதாக ஆதரவு தெரிவித்தனர். ஆனால் எதிர்ப்புக் குரல் சற்று அதிகமாகவே இருந்தது. எவ்வாறாயிறும் குறும்படம் யூடியூப்பில் அதிகம் பேரால் பார்க்கப்பட்டது. சர்ஜூன் கே.எம் என்பவர்தான் இப்படத்தை இயக்கியிருந்தார்.
இந்நிலையில், லக்ஷ்மி குறும்படத்தை இயக்கிய சர்ஜூன் கே.எம் தனது அடுத்த குறும்படத்தை தற்போது இயக்கியுள்ளார். இப்படம் நேற்று யூடியூபில் வெளியிடப்பட்ட நிலையில் அதிகம் பேரால் தற்போது பார்க்கப்பட்டு வருகிறது. கடந்த குறும்படத்தில் சர்ச்சையை கிளப்பும் மையக்கருத்தை இயக்குநர் வைத்திருந்ததால் இப்படத்தின் மையக் கருத்து என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் பலரும் பார்த்து வருகின்றனர். படத்தின் பெயர் ‘மா’.
இப்படத்தில் 10ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவர் தனது 15 வயதிலியே கருவுறுகிறாள். அந்த விஷயம் அம்மாணவியின் தாய்க்கு தெரியவந்த பின் என்ன நடக்கிறது என்பது தான் மீதிக் கதையாக அமைத்திருக்கிறார் இயக்குநர் சர்ஜூன் கே.எம். இக்குறும்படத்தை கவுதம் வாசுதேவ் மேனனின் ‘ஒன்றாக என்டர்டயின்மென்ட்’ நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் ‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜித்தின் மகளாக நடித்த பேபி அனிகா பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.