போர் தொழில் வரிசையில் சரத்குமாரின் ’தி ஸ்மைல் மேன்’.. கிரைம் த்ரில்லராக மிரட்டும் ட்ரெய்லர்!
தமிழ் திரையுலகின் முக்கியமான நடிகர்களில் ஒருவரான சரத்குமார், தன்னுடைய 150வது திரைப்படமாக ’தி ஸ்மைல் மேன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். கிரைம் இன்வெஸ்டிகேசன் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தை ஷ்யாம் பர்வின் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சரத்குமாருடன் சிஜா ரோஸ், இனியா, ஜார்ஜ் மர்யான் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
போர் தொழில், ஹிட் லிஸ்ட், நிறங்கள் மூன்று திரைப்படங்களை தொடர்ந்து மீண்டுமொரு போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தை எடுத்திருக்கும் சரத்குமார், இப்படத்தில் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார், அவரது ஞாபகம் முழுமையாக அழிவதற்குள் அவர் ஒரு தொடர் கொலைகள் செய்த குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும். இதை மையமாக வைத்து படத்தின் கதைக்களம் உருவாகியுள்ளது.
இப்படத்தின் ட்ரெய்லரானது சரத்குமாரின் பழைய திரைப்படங்களின் கதாநாயகிகளான ராதிகா சரத்குமார். ரம்யா கிருஷ்ணன், குஷ்பு சுந்தர், மீனா மற்றும் நமிதா உள்ளிட்டோரால் வெளியிடப்பட்டுள்ளது.
க்ரைம் கதைக்களத்தில் மிரட்டும் ட்ரெய்லர்..
ட்ரெய்லரை பொறுத்தவரையில் தொடர்ந்து கொலைகளாக செய்யும் ஒரு கொலையாளி மற்றவர்களை கொலைசெய்து வாய்ப்பகுதியின் தோல்களை கிழித்து பற்கள் மட்டும் தெரிய சிரித்த முகத்துடன் இறந்து ரத்தம் உறையும் வரையில் காத்திருந்து பொதுவெளியில் வீசிவிட்டு செல்கிறான். இந்த கொடூர கொலைகள் தொடர்ந்து நடந்துவரும் நிலையில், இதேபோலான முந்தைய தொடர்கொலைகளை கண்டறிந்த போலீஸ் அதிகாரியான சரத்குமார் கைகளுக்கு கேஸ்ஷீட் வருகிறது.
ஆனால் அல்சைமர் எனப்படும் நியாபகங்களை இழக்கும் ஒரு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருடைய நியாபகங்கள் சுத்தமாக அழிவதற்குள் கொலையாளியை கண்டறியும் வகையில் கதைக்கள் அமைந்துள்ளது. டிரெய்லரின் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு இன்வெஸ்டிகேசன் காட்சிகளிம் மிரட்சியை ஏற்படுத்தியுள்ளன. ராட்சசன், போர் தொழில் பாணியில் படம் அமைந்துள்ளது தெரிகிறது.
இந்தப்படமும் சரத்குமாருக்கு ஹிட்டடிக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.