‘காந்தி படத்தை போலவே ஹிட்லர் படத்தையும் மக்கள் ரசிப்பார்கள்’ - சரத்குமார்

‘காந்தி படத்தை போலவே ஹிட்லர் படத்தையும் மக்கள் ரசிப்பார்கள்’ - சரத்குமார்

‘காந்தி படத்தை போலவே ஹிட்லர் படத்தையும் மக்கள் ரசிப்பார்கள்’ - சரத்குமார்
Published on

அரசியல் தலையீட்டு காரணங்களால், கலைத்துறை சவால்களை எதிர்கொள்வது வருந்தத்தக்கது என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

முத்தையா முரளிதரன் குறித்த வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய்சேதுபதி நடிப்பதற்கு பல்வேறு திரை பிரபலங்களும் அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் சிலர் சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டும் எனவும் அரசியல் செய்யக்கூடாது எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் விஜய்சேதுபதிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ அரசியல் தலையீட்டு காரணங்களால், கலைத்துறை சவால்களை எதிர்கொள்வது வருந்தத்தக்கது. சோதனைகளை கடந்து பல புதுப்புது படைப்புகளை கொடுக்க தயாராக உள்ள கலைத்துறையின் ஊக்கத்தை தடுக்கின்ற முயற்சி ஏற்புடையது அல்ல.

நாட்டின் வளர்ச்சிக்கோ, பொருளாதார வளர்ச்சிக்கோ இதுபோன்ற நிகழ்வுகள் உதவ போவதில்லை. காந்தி படத்தை ரசிப்பது போலவே ஹிட்லர் படத்தையும் மக்கள் ரசிக்கத்தான் செய்வார்கள் என்பதை மறக்க வேண்டாம். எந்த ஒரு படைப்பிலும் ஒரு இனத்தை இழிவுபடுத்தி காட்சிப்படுத்த கூடாதே தவிர, தனிமனிதன் தன் வாழ்க்கையில் வளர்ச்சியடைய ஊக்கமளிக்கும் வகையிலான சரித்திரத்தை தெரிந்துகொள்வதில் தவறில்லை.

கலைஞர்களுக்கு அணை கட்டக்கூடாது. எல்லைகள் கடந்து கதைகளத்தை தேர்வு செய்து நடிக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு. ஒரு நடிகர் இப்படித்தான் நடிக்க வேண்டும், இந்த கதாப்பாத்திரத்தில்தான் நடிக்க வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்தால் கலை உலகம் முழு சுதந்திரத்துடன் செயல்படமுடியாத சூழல் உருவாகி விடும். தணிக்கை செய்யப்பட்ட பிறகே படம் வெளியாகும் என்பதால் அதன்மீது நம்பிக்கை வைத்து இப்போதே படத்தை பற்றி கருத்துக்கள் தெரிவித்து படைப்பாளிகளின் முயற்சியை தடுக்க வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com