‘வடசென்னை’ டீசர் சர்ப்ரைஸ் உடைத்த சந்தோஷ் நாராயணன்
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ‘வடசென்னை’ டீசர் குறித்த ஒரு செய்தியை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ‘வடசென்னை’. இந்தப் படம் ஒரு ப்ரீயட் ஃபிலிம் ஆகும். வடசென்னையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழும் மக்களின் அரசியலை காட்சி படுத்திருக்கிறார் இயக்குநர். தனுஷுக்கு தேசிய விருது வாங்கிக் கொடுத்த இயக்குநர் இவர் என்பதாலும், வெற்றிப்படங்களை தந்தவர் என்பதாலும் இருவரது கூட்டணி அதிக எதிர்பார்ப்பை சினிமா வட்டாரத்தில் ஏற்படுத்தியுள்ளது.
வழக்கமாக வெற்றிமாறன் படங்களுக்கு ஜி.வி.பிரகாஷ்தான் இசையமைப்பார். இருவரது ரசனையில் வெளியான படங்கள் இசை ரீதியாகவும் வெற்றியை ஈட்டியுள்ளன. ஆனால் முதன்முறையாக வெற்றிமாறன் ‘வடசென்னை’ படத்தின் மூலம் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உடன் இணைந்திருக்கிறார். ஆகவே இருவரது ரசனை எப்படி வெளிப்படும் என பலர் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு படத்தை வெளியிட்டுள்ளார். அப்படத்தில் பேண்ட் வாத்தியத்தில் இசைக்கப்படும் பித்தளை கருவிகளான ட்ரம்பெட், ஆல்டோ சாக்சபோன், கிளாரினெட் போன்றவை இடம்பெற்றுள்ளன. அதில், “இவை எல்லாம் ‘வடசென்னை’ டீசரை சூறையாடி இருக்கின்றன” என்று கூறியுள்ளார். ஆகவே மெட்ராஸ் மணம் கமழும் இந்த வாத்தியங்களின் அதிவேக அலப்பறை அதில் நிறைந்திருக்கும் எனத் தெரிய வந்துள்ளது.