‘பாகுபலி-2’வசூலை முறியடித்த ரன்பீர்கபூரின் ‘சஞ்சு’?
ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ரன்பீர்கபூர் நடித்து வெளிவந்த படம் ‘சஞ்சு’. இது சஞ்சய்தத்தின் வாழ்க்கை வரலாற்று படம் என்பதால் இப்படம் மீதான எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பரவலாக இருந்தது. இந்தப் படம் கடந்த ஜூன் 29ம் தேதி உலகம் முழுவதும் 3500 மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
சஞ்சு திரைப்படம் முதல் வாரத்தில் இந்திய அளவில் மட்டும் ரூ.202.51 கோடி வசூல் செய்தது. 2வது வாரத்தில் ரூ.92.67 கோடியும், 3வது வாரத்தில் ரூ31.62 கோடியும் வசூலானது. மொத்தமாக கடந்த 5 வாரத்தில் மட்டும் ரூ341.22 கோடியை ‘சஞ்சு’ திரைப்படம் வசூலித்துள்ளது. இது ‘பிகே’ படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது. அமீர்கானின் ‘பிகே’ படம் ரூ3.4.8 கோடி வசூல் செய்தது. இந்திய அளவில் அதிகபட்சமாக ‘பாகுபலி-2’ ரூ510.99 கோடியே இதுவரை சாதனையாக உள்ளது. இரண்டாவது இடத்தில் ரூ387.38 கோடி வசூலுடன் ‘தங்கல்’ உள்ளது.
‘சஞ்சு’ திரைப்படம் இந்தியாவில் மட்டும் முதல் நாளில் 34 கோடி வசூல் செய்தது. எனவே இப்படம்தான் இந்த வருடம் வெளியான படங்களில் முதல்நாள் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனை படைத்தது. இப்படம் முதல்நாளில் உலகம் முழுவதும் ரூ 65 கோடி வசூல் செய்தது. முதல் 3 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் செய்து ‘சஞ்சு’ சாதனை படைத்தது. அதேபோல், 5 நாட்களில் ரூ.150 கோடி வசூல் செய்து இருந்தது. ஒரு வாரத்தில் ரூ.200 கோடி வசூல் ஆனது.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் ‘பாகுபலி-2’ படத்தில் வசூல் சாதனையை ‘சஞ்சு’ படம் முறியடித்துள்ளது. ‘சஞ்சு’ படம் ஆஸ்திரேலியாவில் ரூ12.24 கோடி வசூல் செய்து, ‘பாகுபலி-2’ படத்தின் ரூ12.23 கோடி வசூலை முறியடித்துள்ளது. ‘பத்மாவத்’ படம் ரூ16.07 கோடி வசூலுடன் முதல் இடத்தில் உள்ளது. ரூ13.33 கோடியுடன் ‘தங்கல்‘ இரண்டாவது இடத்தில் உள்ளது.