விஜய்யின் அடுத்த படத்தை இயக்குகிறார் சமுத்திரக்கனி?
நடிகர் விஜய்யின் அடுத்த படத்தை இயக்குநரும் நடிகருமான சமுத்திரக்கனி இயக்கப் போவதாக தகவல் பரவி வருகிறது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பை விஜய் நிறைவு செய்துள்ளார். ஆகவே விஜய்யின் அடுத்த படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்பது குறித்து தினமும் பல்வேறு செய்திகள் வலம் வர ஆரம்பித்துள்ளன. ‘மாஸ்டர்’ படத்திற்குப் பிறகு விஜய் நடிக்க உள்ள படத்தை பாண்டிராஜ் இயக்க இருப்பதாக செய்தி பரவியது. அதனை அடுத்து விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப்போகும் இயக்குநர்கள் பட்டியலில் இப்போது ‘நாடோடிகள்’ இயக்குநர் சமுத்திரக்கனியும் இணைந்துள்ளார்.
சமுத்திரக்கனி, சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில், ‘விஜய்யிடம் ஒரு கதையை சொல்லியிருப்பதாக’ கூறியுள்ளார். மேலும், சரியான நேரத்திற்காக காத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் விஜய், பல இயக்குநர்களை சந்தித்து கதைகளை கேட்டு வருகிறார். ஆனால் எந்தக் கதையில் நடிக்க முடிவு செய்திருக்கிறார் என்பது குறித்து விஜய் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. சமுத்திரக்கனியுடன் சேர்த்து மகிழ் திருமேனி, வெற்றிமாறன், பேரரசு, மோகன் ராஜா மற்றும் அருண் காமராஜ் உள்ளிட்ட இயக்குநர்களும் விஜய்யை சந்தித்து கதை கூறியுள்ளனர். ஆகவே இவர்களில் யாரை விஜய் தேர்வு செய்யப்போகிறார் என இவர்கள் அனைவரும் காத்துள்ளனர்.
‘மாஸ்டர்’ படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் மற்றும் சாந்தனு பாக்யராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இதற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். சேவியர் பிரிட்டோ தயாரித்து வரும் இப்படம் தமிழ்ப் புத்தாண்டையொட்டி கோடை விடுமுறைக்கு முன்னதாக ஏப்ரல் 9 ஆம் தேதி திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ரிலீஸ் தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

