“என் நண்பர்கள் பல லட்சம் ஏமாந்திருக்கிறார்கள்” சமந்தா ஷாக்
‘இரும்புத்திரை’ படத்தில் நடித்த தனது அனுபவங்களை சமந்தா பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், “நான் ‘இரும்புத்திரை’ படத்தின் கதையை கேட்கும் போது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நாம் வாழும் இந்தச் சமூகத்தில் நமக்கு தெரியாமல் இவ்வளவு பிரச்சனைகள் இன்டர்நெட் மீடியம் மூலமாக நம்மை சுற்றி நடக்கிறதா என்று பதைபதைக்க வைத்தது. படத்தின் கதையை கேட்டு முடித்ததும் எனக்கு என்னுடைய கைபேசியை தொடவே பயமாக இருந்தது. இந்தப் படம் இன்டர்நெட் மூலமாக நமக்கு என்னவெல்லாம் பிரச்னைகள் உள்ளது? அது நமக்கு எப்படியெல்லாம் தீங்கு விளைவிக்கும் என்று மிக தெளிவாக வெளிச்சம் போட்டுக் காட்டும். நமது பிரைவசி எப்படி வெளியே கசிகிறது என்பதை பற்றியும் இப்படம் உங்களுக்கு புரிய வைக்கும்.
எனக்கு புதுமுக இயக்குநர்களோடு இணைந்து பணியாற்றுவதில் சிறிது தயக்கம்தான். ஆனால் இயக்குனர் மித்ரன் ஒரு போதும் என்னை அப்படி பீல் பண்ண வைத்து இல்லை. அவர் கதை சொல்லும் போதே நாம் ஒரு திறமையான இயக்குநரோடு இணைந்து பணியாற்ற போகிறோம் என்று தெரிய வைத்தார். அவர் சொன்னது போலவே படத்தையும் சிறப்பாக இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் வருவது போன்ற சம்பவங்கள் எதுவும் என்னுடைய வாழ்க்கையில் நடந்தது இல்லை. அதற்கு கடவுளுக்குதான் நன்றி சொல்ல வேண்டும். ஆனால் என்னுடைய நட்பு வட்டத்தில் உள்ள சிலர் இன்டர்நெட் மூலம் நடக்கும் மோசடிகளுக்கு ஆளாகி இருக்கிறார்கள். உங்களுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது, 1 கோடி ரூபாய் வென்றுள்ளீர்கள் என்று வரும் விளம்பரங்களுக்கு பதிலளித்து, பல லட்சங்கள் கொடுத்து ஏமாந்து உள்ளார்கள்.
இன்று ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைத்தளங்கள் அனைத்தும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகிவிட்டது. அவற்றுக்கு நாம் அடிமையாகிவிட்டோம். அது தவறு. அதை நாம் சரியாகப் பயன்படுத்த வேண்டும். ‘இரும்புத்திரை’ரசிகர்களுக்கு சமூக வலைத்தளங்களால் ஏற்படும் பிரச்னை பற்றியும், அதை நாம் எப்படி சரியாக பயன்படுத்தலாம் என்பது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தும்” என்றார்.
‘இரும்புத்திரை’ வருகிற மே மாதம் 11 தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடதக்கது.